முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து அ.தி.மு.க. புதிய பொதுச்செயலாளராக சசிகலாவை கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் தேர்வு செய்தனர். அந்த தீர்மான நகலை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், தம்பித்துரை, பொன்னையன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் போயஸ்கார்டன் சென்று சசிகலாவிடம் வழங்கி பொறுப்பேற்க சம்மதம் கேட்டனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று பொதுச்செயலாளராக சசிகலா சம்மதம் தெரிவித்தார்.
நேற்று சசிகலா மெரீனா கடற்கரை சென்று ஜெயலலிதா, எம்.ஜி.ஆர்., அண்ணா நினைவிடங்களில் பொதுக்குழு தீர்மான நகலை வைத்து வணங்கினார்.
இன்று காலையில் பதவி ஏற்பு விழாவுக்காக போயஸ்கார்டனில் இருந்து புறப்பட்டார். ஜெயலலிதா தலைமைக் கழகத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு வரும்போது வழிநெடுக உற்சாக வரவேற்பு கொடுக்கப்படும்.
அதே போல் சசிகலாவை வரவேற்கவும் பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. தொண்டர்களின் வரவேற்பை ஏற்றபடி பகல் 12 மணியளவில் ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்துக்கு சசிகலா வந்தார். தலைமைக் கழக வாசலில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், அமைச்சர்கள் வரவேற்றனர்.
பின்னர் தலைமைக்கழகம் முன்பு உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு சசிகலா மாலை அணிவித்தார். பின்னர் தலைமை கழகத்துக்குள் சென்று எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா உருவப்படங்களுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு கட்சியின் பொதுச்செயலாளராக முறைப்படி பதவி ஏற்றுக்கொண்டார். பின்னர் நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் பேசினார்.