திருக்குர்ஆனும், நபிகளாரும் பெண்மையைப் போற்றிய அளவிற்கு வேறு யாரும், எந்த வேதமும் பெண்மையின் உரிமையை, உயர்வை, உயர்த்தி உரக்க சொன்னது இல்லை.
ஒரு மனிதனின் வாழ்வில் மூன்று நிலைகளில் தன்னுடைய ஆதிக்கத்தை பெண் செலுத்துகிறாள். அது-தாய், மனைவி, மகள். இந்த மூன்று நிலைகளிலும் பெண்களுக்குரிய அந்தஸ்தும், அதிகாரமும் எவை என்பது திருக்குர்ஆனில் அருளப்பட்டுள்ளது. இது பெண்களுக்கே உரிய தனிச்சிறப்பு ஆகும்.
ஆதி காலத்தில் அரபு நாடுகளில் பெண் சிசுக்களை அழிப்பது நடைமுறையில் இருந்தது. அப்போது அவர் களின் மனதில் அன்பையும், பாசத்தையும் விதைத்து பக்குவப்படுத்த இறைவனால் அருளப்பட்டது தான் இந்த இறைவசனம்:
‘மனிதர்களே! நீங்கள் வறுமைக்கு பயந்து உங்கள் குழந்தைகளை கொலை செய்து விடாதீர்கள். நாம் தான் அவர்களுக்கும், உங்களுக் கும் உணவளிக்கிறோம். அவர்களை கொலை செய்வது நிச்சயமாக அடாத பெரும் பாவமாகும்’ (திருக்குர்ஆன் 17:31)
குழந்தையாய் கையில் தவழ்ந்தவள், வளர்ந்து மலர்ந்து மங்கையாய் நிற்கும் போதும் அவளின் தன்மானத்தை தழைத்தோங்கச் செய்ததும் இஸ்லாம் தான். பெண்கள் இல்லாத உலகம் சூனியப்பட்டு போகும். இன விருத்திக்கு ஏற்புடைய சூழ்நிலை இல்லாமல் மனித இனம் மாண்டுபோகும். உலகம் படைக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறாத நிலை உருவாகும். எனவே ஆண்களைப் போன்று பெண்களுக்கும் எல்லா உரிமைகளும் உண்டு என்று 1438 ஆண்டுகளுக்கு முன்பே பறைசாட்டியது இஸ்லாம் என்ற உன்னத மார்க்கம் தான்.
எந்த மதமும், மார்க்கமும், கொடுக்காத வாரிசு உரிமையை பெண்களுக்கு வழங்கியது இஸ்லாம். ‘சூரத்துல் அன்னிஸா’ என்ற ஓர் அத்தியாயம் பெண்ணுரிமைப் பற்றி மிக தெளிவாக பேசுகிறது.
‘இறந்துபோன தாயோ, தந்தையோ, உறவினர்களோ, விட்டுபோன பொருட்களில் அவை அதிகமாகவோ, கொஞ்சமாகவோ இருந்த போதிலும் ஆண்களுக்கும் பாகமுண்டு. அவ்வாறே தாயோ, தந்தையோ, உறவினர்களோ விட்டுச் சென்ற பொருட்களில் அவை அதிகமாகவோ, கொஞ்சமாகவோ இருந்த போதிலும் பெண்களுக்கும் பாகமுண்டு. இது அல்லாஹ்வால் ஏற்படுத்தப்பட்ட பாகமாகும்’. (திருக்குர்ஆன் 4:7)
சொத்துரிமையை பெண்களுக்கு சட்டபூர்வமாக்கி அதிகாரத்தை வழங்கியதும் இஸ்லாம் தான். அதோடு எத்தனை விகிதத்தில் அது வழங்கப்பட வேண்டும் என்று வரையறுத்து சொல்லியதும் இஸ்லாம் தான்.
பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்ட நிலையை முறியடித்து ஆணுக்கு இணையான எல்லா கல்வியையும் கற்க வழி வகுத்து தந்தது இஸ்லாம் தான்.
திருக்குர்ஆனில் இன்னுமொரு இடத்தில், ‘ஆண்கள் சம்பாதித்தவை ஆண்களுக்குரியது. பெண்கள் சம்பாதித்தது பெண்களுக்குரியது. ஆகவே ஆண்-பெண் ஒவ்வொருவரும் உழைப்பின் மூலம் அல்லாஹ்வுடைய அருளைக்கோருங்கள். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தையும் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்’ (4:32) என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வசனம் நமக்கு சொல்லித்தரும் செய்தி என்னவென்றால், ஆண்களுக்கு இணையாக பெண்களும் தங்கள் வாழ்வாதாரங்களைத் தேடிக்கொள்ளலாம். கணவனின் அனுமதியோடு, ஷரிஅத் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு அது இருக்க வேண்டும். அப்படி அவர்கள் சம்பாதித்தவற்றில் முழு உரிமை அவர்களுக்கு உண்டு.
அதுபோல, திருமண வயதை அடைந்து விட்டால், பெற்றோர் வழிகாட்டுதலுடன், தனக்கான துணையைத் தேர்ந்தெடுக்கும் உரிமையும் பெண்களுக்கு இஸ்லாம் வழங்கியுள்ளது. அதுபோல, தன் மனதிற்கு பிடிக்காத மணமகனை நிராகரிக்கும் உரிமையும் அவர்களுக்கு உண்டு.
ஒரு பெண் கணவனோடு வாழ முடியாது என்று கருதும் பட்சத்தில் அவனை விட்டு விலகி மணவிலக்கு பெறும் சட்ட பாதுகாப்பையும் பெண்களுக்கு வழங்கியுள்ளது இஸ்லாம்.
அது மட்டுமல்ல, ஒரு பெண்ணை ஒரு ஆண் திருமணம் செய்ய விரும்பினால், மணமகளுக்கென விதிக்கப்பட்ட ‘மஹர்’ தொகையைச் செலுத்திய பிறகே அவளை மணமுடிக்க முடியும். அந்த ‘மஹர்’ தொகையை நிர்ணயிக்கும் உரிமை அந்த மணமகளுக்கு உள்ளது.
இதையே திருக்குர்ஆன் (4:4) ‘நீங்கள் திருமணம் செய்தால் பெண்களுக்கு அவர்களுடைய மஹரை கண்ணியமான முறையில் கொடுத்து விடுங்கள்’ என்று வலியுறுத்திக்கூறுகிறது.
அதுபோல விதவை மறுமணத்தையும் வலியுறுத்துகிறது இஸ்லாம். இதையே திருக்குர்ஆன் (24:32) இவ்வாறு குறிப்பிடுகிறது:
‘ஆணாயினும், பெண்ணாயினும் உங்களில் எவருக்கும் வாழ்க்கைத்துணை இல்லாவிட்டால், அவர்களுக்கும் விதவைகளுக்கும் திருமணம் செய்து வையுங்கள்’.
அடுத்து, வயதான பெற்றோர்களை குறிப்பாக தாயை எப்படி கண்ணியமாக நடத்த வேண்டும் என்பதை திருக்குர்ஆனும், நபிமொழியும் அழுத்தமாக எடுத்துக்கூறுகிறது.
‘உங்களிடம் பெற்றோர்கள் ஒருவரோ, இருவரோ முதுமையில் இருக்கிறார்கள் என்றால், அவர்களைப் பேணி பாதுகாத்துக் கொள்ளுங்கள். ‘உஃப்’, ‘சீ’ என்ற வார்த்தையைக் கூட அவர்களிடம் கூறி விடாதீர்கள்’ என்று திருக்குர்ஆன் எச்சரிக்கிறது.
‘உன் பெற்றோரை கண் குளிர, முகமலர்ச்சியோடு பார்ப்பதும் கூட தர்மம் தான்’. ‘உங்கள் இறைவனை வணங்குங்கள், உங்கள் பெற்றோர்க்கும் நன்றி செலுத்துங்கள்’ என்றும் திருக்குர்ஆன் வலியுறுத்துகிறது.
‘உன் தாயின் காலடியில் தான் உன் சொர்க்கம் அமைந்துள்ளது’ என்ற நபிமொழி எத்தனைப் பெரிய சிறப்பை பெண் இனத்திற்கு வழங்கியுள்ளது. ஒருவர் தன் தாய்க்கு மாறுசெய்தால் அவனுக்கு சொர்க்கமே மறுக்கப்படுகிறது என்றால் அதன் ஆழமான அபாயத்தை உணர வேண்டாமா?
இப்படி, மகளாக, மனைவியாக, தாயாக எந்த நிலையில் இருந்திட்ட போதிலும் பெண்களுக்கு அத்தனை உரிமைகளும் வழங்கப்பட்டு அவர்கள் போற்றப்படுகிறார்கள் என்றால் அது இஸ்லாம் என்ற உயரிய தத்துவத்தில் மட்டும் தான். திருக்குர்ஆன் வழியில் நாம் அனைவரும் நடந்து பெண்மையை போற்றுவோம், இறைஅருளைப்பெறுவோம்.
எம். முஹம்மது யூசுப், உடன்குடி.