இராவணன் மிகச் சிறந்த சிவபக்தன். மண்டோதரி எனும் நாகர் குலத்து மகளை மனைவியாகப் பெற்றவன்.
உயிரையும் கொடுக்கக்கூடிய கும்பகர்ணனை சகோதரனாகக் கிடைக்கப் பெற்றவன்.
இவ்வாறு எல்லா வளமும் கிடைக்கப் பெற்ற இராவணன் மிகச் சிறந்த தலைவன். அறம் தெரிந்தவன், தர்மம் புரியும் மனம் கொண்டவன் இருந்தும் அவனே! சீதையைக் கடத்தி வந்து தன்னை மணம் கொள்ளுமாறு வற்புறுத்தினான்.
ஏன்? இப்படி அவன் செய்ய வேண்டும் என்று யாரும் கேட்பதில்லை. ஏதோ இராவணன் இயல்பில் கெட்டவன் போலவும் அவன் விரச மனம் கொண்ட மன்னன் போலவுமே நாம் நினைந்து கொள்கிறோம்.
ஆனால்; உண்மை அதுவன்று. முப்பொழுதும் சிவத்திரு நாமம் சொல்லி சிவபூசை செய்யும் சிவபக்தன் அவன்.
திருநீற்றை தன்மேனியில் அணிந்து இராவணன் மேலது நீறு என்று யாபேரும் போற்றும் படியாக நடந்தவன்.
என் செய்வது! அவன் சகோதரியாக சூர்ப்பனகை இருந்தாள். விதி வசத்தால் இராமனைக் கண்டாள். இராமன் மீது தாபம் கொண்டாள்.
இதன் விளைவு சூர்ப்பனகையின் மூக்கை இராமபிரான் தம்பி இலக்குவணன் வெட்டி விட, அந்தோ! இராவணன் அழிவதற்கு நாள் தீர்மானிக்கப்படுகிறது.
தன் மூக்கறுத்த இலக்குவனையும் தன் விருப்பத்தை நிறைவேற்றாத இராமனையும் அழிக்க திடசங்கற்பம் கொண்டாள்.வழி யாது?
கற்புடைத் தேவி சீதையை-அவள் அழகை இராவணனுக்கு எடுத்துரைத்து அவளைக் கவரச்செய்வதன் மூலம் இராமகுலத்தை அழிக்க முடியும் என்று கருதினாள்.
மூக்கறுபட்ட கணத்தில் இந்த முடிவை எடுத்த சூர்ப்பனகை, மலை எடுத்த அண்ணாவோ… அண்ணாவோ… என்று கூக்குரலிட்டுச் செல்கிறாள்.
இராவணனை உசுப்பேற்றுவதற்காக அப்படியொரு உபாயம் சூர்ப்பனகையால் மேற்கொள்ளப்படுகிறது.
சூர்ப்பனகையின் அவலக் கோசம், மலையொடுத்த அண்ணாவோ என்று அவள் எழுப்பிய வீராவேசம் என எல்லாமும் சேர்ந்து இராவணனை மறம் படைத்தவனாக ஆக்கி விட, சீதை கடத்தப்படுகிறாள்,
இலங்காபுரி எரிகிறது; முடிவு இராவண சேனை மாள்கிறது. இராம சேனையை அழிக்க நினைத்து தீட்டிய திட்டம் மறுதலையாய் நடந்து முடிகிறது.
ஆக, சபதங்களும் சூளுரைகளுமே இவ்வுலகில் யுத்தத்தையும் பேரழிவுகளையும் ஏற்படுத்தியுள்ளன என்பதற்கு சூர்ப்பனகை நல்லதொரு சாட்சி.
இது ஒரு புறம் இருக்க, இப்போது இலங்காபுரியில் இன்னொரு சபதம் எடுக்கப்பட்டுள்ளது.
ஆம் 2017ம் ஆண்டில் ஜனாதிபதி மைத்திரியின் நல்லாட்சியைக் கவிழ்ப்பேன் என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சபதம் செய்துள்ளார்.
சூர்ப்பனகையில் சூளுரை எடுத்தவரையே அழித்தது, மகிந்தவின் சபதம் எதைச் செய்யும் என்பதை காலம்தான் சொல்ல வேண்டும்.
இருந்தும் நல்லாட்சியில் நடப்பவை இந்த நாட்டில் இன சமத்துவத்தை நீதியை நியாயத்தை நிலை நிறுத்துவதாக தெரியவில்லை.
இத்தகைய நிலைமை மகிந்தவின் சபதத்தை நிறைவேற்றி விடுமோ என்று ஐயுறவு கொள்ளச் செய்கிறது.