அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் உட்பட 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தில் இருந்து விலக தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உள்ளூராட்சி சபைத் தேர்தல் ஒத்திவைப்பு, இந்தியாவுடன் செய்து கொள்ளவிருக்கும் எட்கா உடன்படிக்கை, ஹம்பாந்தோட்டைத் துறைமுகம் மற்றும் காணிகளை சீனாவுக்கு விற்பனை செய்யும் தீர்மானம் ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இவர்கள் அரசாங்கத்தில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக பேசப்படுகின்றது.
அத்துடன் ஜனவரி 8 ஆம் திகதிக்கு பிறகு இவர்கள் அரசாங்கத்தில் இருந்து விலக உள்ளதாகவும் கூறப்படுகின்றது.
காலியை சேர்ந்த இருவர், கம்பஹா சேர்ந்த இருவர், குருணாகல், புத்தளம், இரத்தினபுரி, மொனராகலை, மாத்தளை, பதுளை ஆகிய மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்துவோரே இவ்வாறு அரசாங்கத்தில் இருந்து விலக உள்ளதாக தெரியவருகின்றது.
மேலும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த இரண்டு முக்கிய அமைச்சர்கள் இந்த அரசியல் நகர்வுகளை முன்னெடுத்து வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.