தமிழகத்தில் கணவனை இழந்து தவிக்கும் தங்கை வீட்டில், சகோதரன் மனைவியுடன் சேர்ந்து நகைகளை திருடிச் சென்ற சம்பவம் சிசிடிவி கமெரா மூலம் அம்பலமாகியுள்ளது.
சென்னை வடபழனியை சேர்ந்தவர் சாதிக் பாஷா. 42 வயதான இவருக்கு ஷோபானா என்ற 39 வயது மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.
சாதிக் பாஷாவுக்கு உடல்நிலை சரியில்லாததால் கடந்த மாதம் 19-ஆம் திகதி உயிரிழந்தார். அவரது உடல், சொந்த ஊரான மாங்காடு அடுத்த பட்டூரில் அடக்கம் செய்யப்பட்டது.
பிறகு ஷோபனா வடபழனியில் உள்ள வீட்டை பூட்டிவிட்டு, அருகில் வசிக்கும் தனது மூத்த சகோதரன் சாஹித்தை பார்த்துக்கொள்ளும்படி கூறிவிட்டு, குழந்தைகளுடன் பட்டூர் சென்றுள்ளார்.
அங்கிருந்து நேற்று ஷோபனா தனது வடபழனி வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது பீரோ லாக்கரில் வைத்திருந்த 50 சவரன் நகைகள் மற்றும் 80 ஆயிரம் ரொக்கம் பணம் பூட்டு உடைக்கப்படாமல் காணமல் போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதனால் இது குறித்து உடனடியாக அருகில் இருக்கும் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து, ஷோபனா வீட்டின் அருகே பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று விசாரணை நடத்தினர்.
அதில், ஷோபனாவின் மூத்த சகோதரன் சாஹித் தனது மனைவி அனுஷா உடன் சேர்ந்து, கள்ளச்சாவி மூலம் வீட்டின் பூட்டை திறந்து, நகை மற்றும் பணத்தை எடுத்து செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.
இதனால் பொலிசார் அவர்களை தேடிய போது தலைமறைவாகியுள்ளனர். இதையடுத்து பொலிசார் தலைமறைவாக உள்ள சாஹித் அவரது மனைவி அனுஷா ஆகியோரை தேடி வருகின்றனர்.