அர்ஜென்டினாவில் ஊதியம் மற்றும் கிறிஸ்துமஸ் போனஸ் கேட்டு நச்சரித்த ஊழியரை பீட்சா கடை உரிமையாளர் ஒருவர் கொன்று புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த விவகாரம் தொடர்பில் 69 வயதான Luis Mieres என்பவரை பொலிசார் கைது செய்துள்ளதுடன், அவரது குடியிருப்பின் தோட்டத்தில் இருந்து 53 வயதான Jorge Daniel Zagari என்பவரின் சடலத்தையும் கைப்பற்றியுள்ளனர்.
அர்ஜென்டினா தலைநகர் பியுனோஸ் அயர்ஸ் நகரில் திங்களன்று இச்சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
கொரோனா ஏற்படுத்திய பொருளாதார நெருக்கடி காரணமாக வேலை இன்மை, ஊதியம் குறைப்பு நடவடிக்கைகளால் அவதிப்பட்டு வந்துள்ளார் Jorge Daniel Zagari.
இந்த நிலையில், தமது முதலாளியிடம் கிறிஸ்துமஸ் போனஸ் மற்றும் தமக்கு கிடைக்க வேண்டிய ஊதிய பாக்கியை கேட்டுப் பெறும் பொருட்டு, அவர் கடந்த வாரம் தமது வீட்டில் இருந்து கிளம்பியுள்ளார்.
ஆனால் அதன் பின்னர் அவர் குடியிருப்புக்கு திரும்பாத நிலையில், அவரது குடும்பத்தினர் பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
அதே நாளில், Merlo நகரில் எரிந்த நிலையில் Jorge Daniel Zagari-ன் கார் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மட்டுமின்றி, அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமெராவில், சந்தேக நபரின் கார் பதிவாகியிருந்ததாக பொலிஸ் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த நிலையில், பீட்சா கடை உரிமையாளரான Luis Mieres-ன் குடியிருப்பில் சோதனை மேற்கொள்ள பொலிசார் முடிவு செய்தனர்.
இதில், அவரது வீட்டு தோட்டத்தில் புதைக்கப்பட்ட நிலையில், Zagari-ன் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
முதற்கட்ட விசாரணையில் Zagari இரும்பு கம்பி போன்ற பொருளால் தலையில் தாக்கப்பட்டு மரணமடைந்ததாக தெரிய வந்தது.
இருப்பினும் உத்தியோகப்பூர்வ உடற்கூறு அறிக்கை வெளிவர பொலிசார் காத்திருக்கின்றனர்.
இதனிடையே, Zagari ஊதியம் மற்றும் போனஸ் கேட்டு தொடர்ந்து நச்சரித்து வந்ததாலையே, தங்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு அது கொலையில் முடிந்ததாக Luis Mieres தெரிவித்துள்ளார்.