பிரிட்டனைச் சேர்ந்த 9 வயது சிறுமியான எலா என்பவர் காற்று மாசுபாடு காரணமாகப் பலியான முதல் குழந்தை என அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரிட்டனை சேர்ந்த 9 வயது சிறுமியான எலா கடந்த 2013ம் ஆண்டு மூச்சுத் திணறல் காரணமாக உயிரிழந்தார்.
இந்நிலையில் சிறுமியின் மரணம் குறித்து மருத்துவர்கள் அளித்த அறிக்கையில் மரணத்திற்கான காரணம் மூச்சு விடுவதில் ஏற்பட்ட அடைப்பு, கடுமையான ஆஸ்துமா மற்றும் காற்று மாசுபாடு எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இது குறித்து சிறுமியின் பெற்றோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அதில் அவர்கள் தாங்கள் கடந்த 2010ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரை வசித்த பகுதியில் அதிகமாகக் காற்று மாசு உள்ள பகுதி அந்த பகுதியில் உலக சுகாதார மையம் பரிந்துரை செய்ததை விட அதிகமான காற்று மாசு உள்ளது. இதனால் எங்கள் குழந்தை எலாவிற்கு நைட்ரஜன் டை ஆக்ஸைடு அதிகம் கொண்ட காற்றைச் சுவாசிக்கும் நிலை உருவானது. இதுவே அவளின் மரணத்திற்குக் காரணம் எனக் குறிப்பிட்டிருந்தனர்.
இந்த வழக்கில் கோர்ட்டில் ஆஜரான எலாவின் தாய் ரோசாமுண்ட் கோர்ட்டின் தன் குழந்தையை 28 முறை காற்று மாசு காரணமாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றதற்கான ஆவணத்தை சமர்ப்பித்துள்ளார்.
அத்துடன் அவர் அதில் கடந்த 2016ம் ஆண்டு மட்டும் 6 குழந்தைகள் காற்று மாசு காரணமாக உயிரிழந்துள்ளதாகவும், உலகில் பாதி நாடுகளில் காற்று மாசு காரணமாக ஏற்படும் மரணம் குறித்து எந்த வித புள்ளி விபரங்களும் இல்லை எனவும் தெரிவித்திருந்தார்.
இதேவேளை எலா இறந்து சுமார் 7 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இந்த வழக்கில் எலா காற்று மாசு காரணமாகவே இறந்துள்ளார் என்ற தீர்ப்பு வெளியாகியுள்ளது.
இப்படியான ஒரு தீர்ப்பு உலகிலேயே முதன் முறையாக வெளியாகியுள்ளது. இதனால் உலகில் காற்று மாசு காரணமாக இறந்த முதல் குழந்தையாக எலா பார்க்கப்படுகிறாள்.
இந்த தீர்ப்பின் மூலம் காற்று மாசு கட்டுப்பாடு குறித்து உலக நாடுகள் அதிக கவனம் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் எதிர்காலத்தில் காற்று மாசு என்பது உலகிற்கே மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தும் எனப் பல வல்லுநர்கள் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.