இந்த கதையில் ராமனின் சிறந்த பக்தனும், தூதனுமான ஆஞ்சநேயர் தோல்வி அடைந்து விட்டாரே அப்படியானால் இவ்வளவு காலமும் அவர் செய்த தவமும், ராமனை தன் பக்தியால் துதித்ததும் வீணோ? என்று எண்ணத் தோன்றும். காரணம் இன்றி எந்த காரியமும் நடைபெறுவதில்லை.
அர்ச்சுனன், ராமரை இகழ்ந்து பேசியதும், அனுமனுக்கு கோபம் வந்துவிட்டது. அதனால்தான் தன்னையும் அறியாமல், ‘நான் போட்டியில் தோல்வியுற்றால், உன்னுடைய தேரில் கொடியாக இருந்து போரில் வெற்றிபெற துணை நிற்கிறேன்’ என்றார். மகாபாரத போருக்கு ஆஞ்சநேயரின் பங்கு தேவை என்பதாலேயே, இரண்டாவது முறையாக போட்டியை நடக்க வைத்து அந்த போட்டியின் போது ஆஞ்சநேயருக்கு தோல்வி உண்டாகும்படி செய்தார் கண்ணன்.
இதில் மேலும் ஒரு உண்மை புதைந்துள்ளது. முதல் முறை போட்டி நடைபெற்ற போது அர்ச்சுனன் யாரையும் நம்பாமல் தன் திறமையின் மீது உள்ள ஆணவத்தின் பேரில் பாலத்தை கட்டினான். அப்போது ஆஞ்சநேயர், ராம நாமத்தை துதித்தபடி கால் வைத்ததால் அந்த பாலம் உடைந்து நொறுங்கிப் போனது. ஆனால் இரண்டாவது முறை நடந்த போட்டியின் போது அர்ச்சுனன், கண்ணனை தன் மனதார துதித்தபடி அம்பு பாலத்தை கட்டினான்.
அப்போது அவனிடம் ஆணவம் அகன்றிருந்தது. ஆனால் ஆஞ்சநேயர், ஒரு முறை ஜெயித்து விட்ட சிந்தனையில் ராம நாமத்தை துதிக்க மறந்து, செய்த சிறு தடுமாற்றத்தால் அவர் தோல்வி அடைய நேர்ந்தது.