முல்லைத்தீவு மாவட்டத்தில் இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறிய செயற்பாடுகள் தொடர்பில் கடந்த 15-12-2020 அன்று முல்லைத்தீவு கடற்கரையில் இருந்து மாபெரும் கவனயீர்ப்பு பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டு மாவட்ட செயலகம் முன்பாகவும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முல்லைத்தீவில் நடாத்தப்பட்டு அதனைத் தொடர்ந்து தொடர் போராட்டமாக முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக கொட்டகை அமைத்து போராட்டம் இடம்பெற்று வந்தது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் அத்துமீறிய இந்திய இழுவை படகுகளினுடைய அட்டகாசங்கள் மற்றும் சட்டவிரோத தொழில்கள் தென்பகுதி மீனவர்களின் வருகை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் காரணமாக தொடர்ச்சியாக முல்லைத்தீவு மாவட்ட மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் இவற்றில் இருந்து விடுபடும் முகமாக தொடர் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முல்லைத்தீவு மீனவர்கள் ஆரம்பித்திருந்தனர்.
இதனடிப்படையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட கடற்தொழில் அமைப்புகள் சார்ந்த பிரதிநிதிகள் கடற்தொழில் நீரியல் வளத்துறை அமைச்சர், முல்லைத்தீவு மாவட்ட கடற்படைத் தளபதி, முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகள் நேரடியாக தமது போராட்ட கொட்டகைக்கு வருகை தந்து இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறிய செயற்பாடுகள் மற்றும் சட்டவிரோத தொழில்கள் போன்றவற்றிற்கு தீர்க்கமான முடிவுகளை தந்தாலே தமது போராட்டம் கைவிடப்படும் என தெரிவித்து போராட்டத்தை முன்னெடுத்து வந்தனர்.
இந்நிலையில் இன்று(20) ஆறாவது நாளாகவும் முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக போராட்டம் இடம்பெற்று வந்த நிலையில் காலை எட்டு முப்பது மணி அளவில் சம்பவ இடத்திற்கு கடற்தொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கு.திலீபன், முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய காதர் மஸ்தான் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன், முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள உதவிப்பணிப்பாளர், அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் போராட்ட கொட்டகைக்கு வருகைதந்து மீனவ பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினர்.
தன் மீது நம்பிக்கை கொள்ளுமாறும் தான் குறித்த நடவடிக்கைகளை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுவேன் எனவும் தெரிவித்ததோடு கடற்படையினர் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாத பட்சத்தில் மீனவர்கள் சட்டவிரோத தொழிலில் ஈடுபடுகின்ற அத்துமீறி வருகின்ற இந்திய மீன்பிடி படகை கரைக்கு கொண்டு வந்து உரிய அதிகாரிகளிடம் ஒப்படைத்தால் அதற்கும் தான் நடவடிக்கை எடுப்பதாகவும் வாக்குறுதி அளித்தார். அத்தோடு இந்த பாதிக்கப்பட்ட மக்களினுடைய தீர்வை நோக்கிய தன்னுடைய நடவடிக்கைக்கு ஜனாதிபதி பிரதமர் உள்ளிட்டவர்கள் தனக்கு பூரண ஆதரவு வழங்குவதாகவும் இவ்வாறான விடயங்களை செய்ய முடியாவிட்டால் தான் பதவி விலகுவதற்கும் தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.
அதோடு தன்னுடைய வாக்குறுதிகளை நம்பி போராட்டத்தை கைவிடுவதாக இருப்பின் போராட்டத்தை கைவிடுமாறும் இல்லையெனில் இந்திய மீனவர்கள் பேச்சுவார்த்தை நடைபெறும் வரை நீங்கள் போராட்டங்களை தொடர்வதாக இருந்தாலும் எனக்கு ஆட்சேபனை இல்லை என்பதையும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் குறித்த கலந்துரையாடல் நிறைவு பெற்றதன் பின்னர் மீன்பிடி அமைப்புகளின் பிரதிநிதிகள் ஒன்றுகூடி அவருடைய கருத்துக்கு மதிப்பளித்து அவர்கள் மீது நம்பிக்கை வைத்து தான் தங்களுடைய போராட்டத்தை இடை நிறுத்துவதாகவும் எதிர்வரும் காலங்களிலும் இவ்வாறான சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்ச்சியாக இடம்பெறும் எனில் தாம் மீண்டும் போராட்டத்தில் குதிக்க நேரிடும் எனவும் தெரிவித்துள்ளனர்.