ஐக்கிய மக்கள் சக்தியின் கட்சி யாப்பு நிறைவேற்றப்பட்டுள்ளதாக அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
பண்டாரவளையில் நேற்று நடைபெற்ற கட்சியின் நிறைவேற்றுக்குழுக் கூட்டத்தில் இந்த யாப்புக்கு அனுமதி கிடைத்துள்ளது.
அண்மையில் யாப்பு தொடர்பான வரைவு கட்சியின் நிறைவேற்றுக் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டதுடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து முன்வைத்த புதிய யோசனைகள் மற்றும் கருத்துக்களை உள்ளடக்கி புதிய யாப்பு உருவாக்கப்பட்டது எனவும் அத்தநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
இந்த யாப்புக்கு அமைய கட்சியின் புதிய பணிகள் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் ஆம்பிக்கப்படவுள்ளது.
நிறைவேற்றப்பட்ட யாப்புக்கு அமைய புதிய செயற்குழு, புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட உள்ளனர். கீழ் மட்டத்தில் ஒருங்கிணைப்பை மேற்கொள்ள தேசிய ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளது. இதற்கான அமைப்பாளர்கள் நியமிக்கப்பட உள்ளதுடன் இணை அமைப்புகளை ஏற்படுத்தப்படவுள்ளது எனவும் திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
2021 ஆம் ஆண்டுக்கான உறுப்பினர்களை சேர்ப்பதற்கான நடவடிக்கைகளையும் ஐக்கிய மக்கள் சக்தி நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த புதிய வேலைத்திட்டத்துடன் தம்முடன் இணையுமாறு ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஏற்கனவே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் இரண்டு கட்சிகளும் இணைந்து போட்டியிட வேண்டும் எனவும் அத்தநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.