அடுத்த ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் மாகாண சபை தேர்தலை நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதுடன், அதனை பழைய முறைப்படி நடத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் நேற்றைய தினம் தெரிவித்துள்ளன.
மாகாண சபைத் தேர்தல்கள் பழைய முறையின்படி நடத்தப்படுவது தொடர்பாக ஏற்கனவே அமைச்சரவை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் குறிப்பிட்டுள்ளார்
கடந்த வாரம், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, தேர்தல் ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு, விரைவில் மாகாண சபை தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார்.
கொவிட்-19 வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிக்கும் அதே வேளையில், மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கு கட்டாய நடவடிக்கைகளை எடுக்கவும், வரவிருக்கும் தேர்தல்களின் சட்ட கட்டமைப்பைக் கருத்தில் கொள்ளுமாறும் பிரதமர் தேர்தல் ஆணையத்திற்கு அறிவுறுத்தினார்.
எவ்வாறெனினும் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்குத் தேவையான சட்ட விதிகள் குறித்து ஆராயும் பணிகளை தேர்தல் ஆணையம் ஏற்கனவே தொடங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.