பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினரால் ஐந்து கோடி ரூபாவுக்கும் அதிகமான பணம் மற்றும் ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட பெண்ணொருவர் உட்பட மூன்று சந்தேக நபர்களையும் தடுப்பு காவலில் வைத்து விசாரணைக்குட்படுத்த எதிர்பார்த்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
கடுவெல ,மாலம்பே மற்றும் வெலிவிட்ட ஆகிய பகுதிகளில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் நேற்று மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போது ,போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய பெண்ணொருவர் உட்பட மூன்றுபேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது நுகேகொட பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய பெண்ணோருவரும்,கடுவெல – ஹேவாகம மற்றும் தலங்கம – பத்தரமுல்ல ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சந்தேக நபர்கள் இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடமிருந்து 300 கிராம் ஹெரோயின் போதைப் பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதேவேளை கடுவெல – ஹேவாகம பகிதியில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து ஐந்து கோடியே 90 இலட்சம் ரூபாய் பணிமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரகாலமாக மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் கடத்தல் ஊடாகவே கிடைக்கப்பெற்ற பணத்தை வங்கியில் வைப்பிலிடும் நோக்கத்திலேயே சந்தேக நபர் இவ்வாறு வைத்திருந்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்த பணமே கடந்த காலங்களில் கைப்பற்றப்பட்ட பெருந்தொகையான பணத் தொகை என்றே கருதப்படுகின்றது.
பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவின் பிரதி பொலிஸ்மா அதிபர் உபாலி ஜயசிங்க மற்றும் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமாந்த விஜேசேகர ஆகியோரின் ஆலோசனையின் பேரிலேயே இந்த சுற்றிவளைப்புகள் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில், சந்தேக நபர்கள் போதைப் பொருள் கடத்தலுக்காக எத்தகைய முறைகளை கையாண்டனர் என்பது தொடர்பிலும், பணத்தை பெற்றுக் கொண்ட விதம் தொடர்பிலும் விசாரணைகள் இடம்பெற்று வருவதுடன்,சந்தேக நபர்களை ஏழு நாட்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரணைக்குட்படுத்தவும் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினர் எதிர்ப்பார்த்துள்ளனர்.