சிட்னியில் அதிகளவில் கொரோனா வைரஸ் பரவுவதால் இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதும் டெஸ்ட் போட்டிகளின் அட்டவணை மாற்றியமைக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் டெஸ்டில் இந்திய கிரிக்கெட் அணி படுமோசமான தோல்வியைச் சந்தித்தது.
இந்நிலையில் இரு அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் 26ஆம் தேதி பாக்சிங் டேவில் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் துவங்குகிறது.
மூன்றாவது டெஸ்ட் போட்டி நடக்கவுள்ள சிட்னி நகரில் கொரோனா வைரஸ் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. மூன்றாவது டெஸ்ட் போட்டி ஜனவரி 7ஆம் தேதி துவங்கவுள்ள நிலையில் கொரோனா பரவுவதால் அங்குப் போட்டியை நடத்துவது பாதுகாப்பானதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதனால் மூன்றாவது மற்றும் நான்காவது டெஸ்ட் போட்டியை மாற்றி நடத்துவது குறித்து கிரிக்கெட் ஆஸ்திரேலியா ஆலோசனை செய்துவருவதாகத் தெரிகிறது.
இதுதொடர்பாக ஆஸ்திரேலிய பத்திரிக்கை வெளியிட்டுள்ள செய்தியில்,
“கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் தகவலின்படி திட்டமிட்ட படி மூன்றாவது டெஸ்ட் போட்டியை சிட்னியில் நடத்துவதற்கு முயற்சிப்போம் என்றும். வேறுவழியில்லை என்றால் மூன்றாவது போட்டியை பிரிஸ்பேனில் நடத்துவது குறித்து முடிவு செய்யப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அப்படி இல்லை என்றால் மற்றொரு மாற்றுவழியாக இரண்டாவது டெஸ்ட் போட்டி நடக்கும் மெல்போர்ன் மைதானத்திலேயே மூன்றாவது டெஸ்ட் போட்டியை நடத்தவும் கிரிக்கெட் ஆஸ்திரேலியா ஆலோசனை செய்துவருவதாகவும் தெரிகிறது. தற்போதைய நிலையில் குயின்ஸ்லாந்து மாநில எல்லைக3ள்3 அடைக்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு பின் வீரர்கள் மற்றும் ஒளிபரப்பு நிறுவனங்கள் சிட்னியிலிருந்து பிரிஸ்பேனுக்கு செல்லமுடியாத சூழல் உருவாகியுள்ளது.
இதனால் இந்த தொடருக்கான அட்டவணையில் மாற்றும் செய்ய வேண்டிய கட்டாயத்தில் கிரிக்கெட் ஆஸ்திரேலியா உள்ளமை குறிப்பிடத்தக்கது.