அமெரிக்காவில் நடுவானில் பறந்தபோது விமானத்தில் கொரோனா அறிகுறியுடன் பயணி ஒருவர் உயிரிழந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அமெரிக்காவின் ஆர்லாண்டோ நகரில் இருந்து லாஸ் ஏஞ்சல்சுக்கு பயணிகள் விமான ஒன்று புறப்பட்டு சென்றது. அதில் பயணம் செய்த ஆண் பயணி ஒருவருக்கு திடீரென உடல் நிலை மோசமானது.
இதனையடுத்து உடனடியாக விமானம் நியூஆர்லியன்சில் தரை இறக்கப்பட்டடு மருத்துவர்கள் பரிசோதித்தபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
அப்போது இறந்தவருடன் வந்திருந்த அவரது மனைவி, ‘கடந்த ஒரு வாரமாகவே கணவருக்கு கொரோனா அறிகுறிகள் இருந்ததாக சக பயணிகளிடம் தெரிவித்தார்.
இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சக பயணிகள், கொரோனா தொற்று அறிகுறி உள்ள ஒருவரை பயணம் செய்ய எப்படி விமான நிறுவனம் அனுமதித்தது என ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து விமான நிறுவனம் கூறும்போது, ‘இறந்த நபர் பயணத்துக்கு முன்பு விமான நிலையத்தில் நிரப்பிய படிவத்தில் தனக்கு கொரோனா இருப்பதாகவோ, அறிகுறிகள் உள்ளதாகவோ தெரிவிக்கவில்லை என கூறியுள்ளது.
எனினும் பயணம் செய்யும் முன்பு பயணியின் உடல்வெப்ப நிலையை ஊழியர்கள் சரியாக பரிசோதிக்கவில்லை என்று மற்ற பயணிகள் குற்றம்சாட்டி உள்ளனர்.
இதைத்தொடர்ந்து அந்த விமானத்தில் பயணம் செய்த 179 பயணிகளை தொடர்புகொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் விமான ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.