இந்து மதத்தினரின் வணக்கத்துக்குரிய காளி அம்மனை, அவதூறாக சித்தரித்த சட்டத்தரணியான பெண்ணொருவர் தனது முகநூலில் பதிவு செய்துள்ளமை அனைத்து மத மக்களுக்கும் தலைகுனியும்படி செய்துள்ளது.
குறித்த பெண், மக்களிடையே மத ரீதியான கலவரத்தை தூண்டுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இப் பெண்ணின் முகநூல் பதிவால் இந்து மக்கள் மட்டுமின்றி, பெண் இனமே வெட்கப்படும் வண்ணம் அமைந்துவிட்டது.
இந்த நிலையில், காளியம்மனை முகநூலில் இழிவாக, அவதூறாக பதிவுகளை இட்ட பெண்ணுக்கு எதிராக மலையக இந்து குருமார் ஒன்றியத்தின் செயலாளர் சுரேஸ்வர சர்மா நேற்று ஞாயிற்றுக்கிழமை ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
காளியம்மனை அவதூறு செய்த பெண்ணை கைது செய்யுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
முறைப்பாட்டின் பிரதிகளை ஜனாதிபதி, பிரதமர், பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,
ஒரு பெண்ணான அவர் பெண் தெய்வத்தை இழிவுபடுத்தியுள்ளார். அதனை எவராலும் மன்னிக்க முடியாது. முழு பெண்ணினத்திற்கே அவமானம் ஏற்படும் வகையில் அவர் பதிவுகளை இட்டுள்ளார்.
அத்துடன் குறித்த பெண் இரண்டு மதங்களுக்கிடையே பிளவினை ஏற்படுத்தி இந்த நாட்டில் மத பிணக்கை ஏற்படுத்த முனைகிறார்.
அத்தோடு இந்நாட்டில் அனைத்து மதம் சார்ந்தவர்களும் சகவாழ்வு வாழ்கின்ற நிலையில், அவரது செயற்பாடு இந்நாட்டில் மதவாதத்தை ஏற்படுத்திய சமாதானத்தை சீர்குலைப்பதாக உள்ளது.
எனவே அவரை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் இதற்கு எதிராக அணிதிரண்டு நாம் போராட வேண்டிய நிலை ஏற்படும்.
அது மாத்திரமல்ல, சட்டத்தில் உள்ள ஏற்பாடுகளின்படி வழக்குத் தாக்கல் செய்யவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.
எனவே இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கேட்டுள்ளார்.