ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வில்பத்து சரணாலயம் தொடர்பான அறிவிப்பு முஸ்லிம் மக்களை கவலையடைய வைத்துள்ளதாக வட மாகாணசபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
வில்பத்து சரணாலயத்துக்கு சொந்தமான பகுதியை விரிவுபடுத்தி அதனை வனஜீவராசிகள் வலயமாக வர்த்தமானியில் அறிவிக்குமாறு ஜனாதிபதி விடுத்திருக்கும் அறிவிப்பு தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
முசலிப் பிரதேச முஸ்லிம்கள் தொடர்பில் வெளியான தகவல்கள் போலியானவை எனவும் அந்த தகவல்களை பெற்றுக்கொண்ட ஜனாதிபதி அவசர அவசரமாக மேற்கொண்ட இந்த முடிவானது நல்லாட்சியின் மீதான முஸ்லிம்களின் நல்லெண்ணத்தை பாழ்படுத்தியுள்ளது எனவும் சுட்டிக்காட்டினார்.
மேலும், ஜனாதிபதி இனவாதிகளின் பிழையான தகவல்களைப் பெற்று இவ்வாறான நடவடிக்கைகளை இப்போது மேற்கொள்வது முஸ்லிம்களின் நம்பிக்கையை இழக்க வைக்கின்றது.
ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு முஸ்லிம்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு எதிராக கிளர்ந்து ஆட்சி மாற்றத்தை மேற்கொள்ள ஆற்றிய பங்களிப்பை எவரும் இலகுவில் மறந்துவிடக் கூடாது மறந்து விடவும் முடியாது எனவும் அவர் இதன் போது குறிப்பிட்டார்.