எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தரப்பும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தரப்பும் ஒன்றிணைந்து போட்டியிடுவது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இரண்டு பிரதான தரப்புக்களும் கை சின்னத்தில் போட்டியிடுவது குறித்து கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தனித் தனியாக தேர்தலில் போட்டியிட்டால் இரண்டு தரப்புக்கும் அது அரசியல் ரீதியான அழிவினை உருவாக்கும் எனவும் இதனால் கூட்டாக இணைந்து போட்டியிட வேண்டியது அவசியமானது எனவும் சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 2020ம் ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆட்சி ஒன்றை நிறுவும் நோக்கில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டு தரப்பும் ஒன்றிணைந்து செயற்படுவதில் பாரிய அரசியல் சிக்கல்கள் கிடையாது என சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த பொதுத் தேர்தலைப் போன்று ஒன்றாக போட்டியிட்டு ஒருவரை ஒருவர் காலில் இழுக்காது ஒன்றிணைந்து போட்டியிடுவதன் மூலம் வெற்றியீட்ட முடியும் எனவும் அதன் அடிப்படையில் மைத்திரி – மஹிந்த தரப்பு பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் ஏற்கனவே இது குறித்த சில ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமால் ராஜபக்சவிற்கு உயர் பதவியொன்றை வழங்கி இரு தரப்பிற்கும் இடையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்த விடயங்கள் தொடர்பில் மைத்திரி தரப்போ மஹிந்த தரப்போ உத்தியோகபூர்வமாக எதனையும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.