ஜனவரி 24ல் நடக்க இருக்கும் சனிப் பெயர்ச்சியில் எந்த ராசிக்கு விரய சனி, ஜென்ம சனி, பாத சனி, குடும்ப சனி, அஷ்டமத்து சனி, கண்டக சனி, அர்த்தாஷ்டம சனி என்பதை விரிவாக, எளிதாக அறிந்து கொள்ளுங்கள்.
அதற்கான பரிகாரங்களைச் செய்து வாழ்வில் மேம்படுங்கள்.
ஜோதிடத்தில் மிக முக்கிய செயல் கிரக நகர்வு என சொல்லப்படும் கிரகங்களின் பெயர்ச்சி. ஒவ்வொரு கிரகமும் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கும் பெயர்ச்சி ஆக எவ்வளவு காலம் எடுக்கும் என்பதைப் பார்ப்போம்,
- சந்திரன் – 2 1/4 நாட்கள் (54 மணி நேரம்)
- சூரியன் – ஒரு நாள்
- புதன் கிரகம் – 27 நாட்கள்
- செவ்வாய் – 45 நாட்கள்
- குரு பகவான் (வியாழன்) – சுமார் ஒரு ஆண்டு
- ராகு – கேது கிரகங்கள் – ஒன்றரை ஆண்டுகள்
- சனி கிரகம் – சுமார் 2 1/2 (இரண்டரை ஆண்டு)
- இதில் ஒரு ராசியில் மிக நீண்ட காலம் இருப்பது சனி பகவான்.
சனி பெயர்ச்சி
குரு பார்வையால் பலனும், சனியின் ஸ்தான பலமும் அளிக்கும் என்பார்கள். பொதுவாக சனி கிரகம் ஜாதகத்தின் ஆயுள், தொழில், கர்மா ஆகியவற்றை ஆளக்கூடியது. இதனால் தான் சனி பகவானை ஆயுள் காரகன், தொழில் காரகன், கர்ம காரகன் என அழைக்கிறார்கள்.
ஒருவரின் ஜாதக கோச்சாரப் பலன், சந்திரனின் அமைப்பைப் பொறுத்து சொல்லப்படுகிறது. அதன் படி தற்போது 2020 சனிப் பெயர்ச்சி தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு செல்ல உள்ளார்.
யாருக்கு என்ன சனி
தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு சனி பெயர்ச்சி ஆகின்றார். இதனால் மகரத்திற்கு முன் மற்றும் பின் உள்ள ராசிக்கு ஏழரை சனி. இதனால் விருச்சிக ராசி ஏழரை சனியிலிருந்து விடுபடுகிறது. கும்ப ராசிக்கு புதிதாக ஏழரைச் சனி ஆரம்பிக்கின்றது.
அஷ்டமத்து சனி : மிதுனம்
சனி பகவான் அமரும் மகர ராசியிலிருந்து 6வது இடமான மிதுனத்திற்கு அஷ்டமத்து சனி.
இதனால் உங்களின் தன ஸ்தானம், குடும்ப ஸ்தானம், பூர்வ புண்ணிய ஸ்தானம், தொழில் ஸ்தானம் ஆகியவற்றை பார்க்கின்றார். இதனால் உங்களின் தன ஸ்தானம் பாதிப்பதால் உங்களின் பொருளாதார பிரச்சினைகள் ஏற்படலாம். பணப் பிரச்னை, வருவாய் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
குடும்ப ஸ்தானத்தைப் பார்ப்பதால் உங்களின் குடும்ப உறவில் சிக்கல், சச்சரவுகள் ஏற்படக் கூடும். குழந்தைகளுடன் மன ஸ்தாபம் ஏற்படக் கூடும். உறவினர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படக் கூடும்.
தொழில் ஸ்தானத்தை பார்ப்பதால் உங்களின் தொழிலில் சிக்கல்களும், பிரச்சினைகளும் சந்திக்கக் கூடும். பணி இட பிரச்னைகள், வேலையை முடிக்க முடியாமல் திணறுதல் போன்ற விஷயங்கள் நடக்கலாம்.
செய்ய வேண்டியவை
நேரத்தை சரியாக பயன்படுத்தி வேலையை துரிதப்படுத்தினால் சிக்கலிலிருந்து தப்பிக்கலாம். நேர்மையை கடைப்பிடிப்பதால் நன்மை வந்து சேரும். குடும்பத்தில் அனுசரித்து செல்லுவது அவசியம்.
கண்ட சனி : கடகம்
சனி பகவான் அமரும் மகர ராசியிலிருந்து 7வது இடமான கடக ராசிக்கு இந்த முறை கண்டக சனி.
இது உங்களின் ராசி, சுப ஸ்தானம், பாக்கிய ஸ்தானங்களை பாதிக்கக் கூடும்.
சுப ஸ்தானத்தைப் பார்ப்பதால் திருமணம் போன்ற சுப காரியங்கள் தள்ளிப்போக வாய்ப்புள்ளது.
பாக்கிய ஸ்தான பாதிப்பால் குழந்தை பாக்கியம் உள்ளிட்ட பாக்கியத்தில் சிக்கல் ஏற்படக் கூடும்.
செய்ய வேண்டியவை
சிவ ஆலய தரிசனமும், நவகிரகத்தில் சனி பகவானின் வழிபாடு, எள் தீபம் ஏற்றுதல் நல்லது.
அர்த்தாஷ்டம சனி : துலாம்
சனி அமரும் மகர ராசியிலிருந்து 10வது இடமான துலாம் ராசிக்கு அர்த்தாஷ்டம் சனி என்று பெயர். இந்த சனிப் பெயர்ச்சியில் துலாம் ராசிக்கு 4வது இடத்தில் அதாவது மகரத்தில் அமர்கிறார். இதனால் சனி ராசி, ரோக, தொழில் ஆகிய ஸ்தானங்களைப் பார்க்கின்றார்.
ரோக ஸ்தானத்தை பார்ப்பதால் சோம்பேறித்தனம் அதிகரிக்கும். உடல் நல பிரச்சினைகள் ஏற்படக் கூடும். சரியான நேரத்தில் சாப்பிடுவது, சரியான அளவு, சரியான உணவை சாப்பிடுவது மிக அவசியம். உடல்நலத்தை கண்ணும் கருத்துமாக கண்காணிப்பது அவசியம். உடற்பயிற்சி அவசியம்.
தொழில் ஸ்தனத்தையும் பார்ப்பதால், தொழிலில் மிக கவனமாக இருப்பது அவசியம். தன் சோம்பலால் பணியை சரியாக முடிக்க முடியாத சூழல் உருவாகும். சக பணியாளர்களிடம் கண்ணியமாக, அனுசரித்து நடந்துகொள்வது நல்லது. வேலையை சரியான நேரத்தில் முடிக்க முயலவும்.
விரய சனி : கும்பம்
ஏழரை சனி புதிதாக தொடங்கும் ராசிக்கு விரய சனி என பெயர். 2020 சனிப் பெயர்ச்சியில் ஏழரை சனி தொடங்கும் கும்பத்திற்கு விரய சனி.
விரய சனி என்பது காரிய தடை உருவாகும். வாழ்க்கை துணையுடன் கருத்து மோதல் ஏற்படலாம். பண விரயம் ஏற்படக் கூடும். இதனால் பணத்தை கவனமாக பயன்படுத்துவது மிக அவசியம்.
விரய சனியில் நல்ல பலனும், கெடுபலனும் கலந்து இருக்கும். 30 வயதுக்குட்பட்டவர்கள் சற்று கவனமாக இருப்பது அவசியம். 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் பொங்கு சனி என்பதால் அவர்களுக்கு சொத்துக்கள் சேரும்.
ஜென்ம சனி: மகர ராசி
எந்த ராசிக்கு சனி பகவான் சஞ்சரிக்க உள்ளாரோ அந்த ஜென்ம ராசிக்கு ஜென்ம சனி ஆரம்பம். 2020 சனிப்பெயர்ச்சியில் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு செல்வதால் மகர ராசிக்கு ஜென்ம சனி தொடக்கம்.
இந்த காலத்தில் மன அழுத்தத்தை சனி தருவார். இதனால் எதிலும் கவனம் தேவை. வாய்ப்பு உருவாக்கி தருவார். அதை சரியாக பயன்படுத்தி உயர்வது உங்கள் கையில் தான் உள்ளது.
பரிகாரம்: வடதிருநள்ளாறு எனப்படும் பொழிச்சலூரில் உள்ள அகஸ்தீஸ்வரர் ஆலயம் சென்று சனிபகவானை வணங்கி வர பாதிப்புகள் குறையும்.
பாத சனி, வாக்கு சனி : தனுசு ராசி
ஏழரை சனியின் இறுதி நிலை அதாவது 3வது நிலை, எந்த ராசியில் சனி இருக்கின்றாரோ அந்த ராசிக்கு முந்தைய ராசிக்கு பாத சனி, வாக்கு சனி என பெயர்.
பாத சனி என்பதால் பயணங்களில் மிக கவனம் தேவை. வாக்கு சனியாக நாம் கொடுக்கும் வாக்கை நிறைவேற்றுவதில் சற்று சிக்கல் ஏற்படும். இருப்பினும் வீண் வாக்குவாதங்களைத் தவிர்த்து நேர்மையாக நாம் எடுக்கும் முயற்சிகளால் நாம் கொடுக்கும் வாக்கை நிறைவேற்றக் கூடிய காலம்.
பரிகாரம்
குச்சனூரில் உள்ள சனி பகவான் ஆலயத்திற்குச் சென்று வணங்கி வருவதால் நன்மை விளையும்.