தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் வேட்பாளர் யார் என்பது, கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும். இன்று யாழ் மாநகரசபை உறுப்பினர்களுடனான கலந்துரையாடலில் இந்த முடிவு அறிவிக்கப்படும்.
யாழ் மாநகரசபை உறுப்பினர்களின் கருத்தறியும் கலந்துரையாடல் இன்று இடம்பெற்றது. யாழ்ப்பாணம் – மார்டின் வீதியில் அமைந்துள்ள இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைமைச் செயலகத்தில் இன்று மாலை இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.
இந்தக் கூட்டத்தில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை. சோ. சேனாதிராஜா, புளொட் அமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான த. சித்தார்த்தன், நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன், வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், தமிழ் அரசு கட்சியின் பதில் பொதுச்செயலாளர் ப.சத்தியலிங்கம், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பா. கஜதீபன் மற்றும் கட்சியின் பிரமுகர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாநகர சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
கூட்டத்தின் ஆரம்பத்திலேயே, இன்று முதல்வர் வேட்பாளர் தீர்மானிக்கப்பட மாட்டார்கள், அது கட்சியின் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டு, எதிர்வரும் 29ஆம் திகதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இதன்போது, ஒவ்வொரு உறுப்பினர்களின் கருத்தும் கேட்கப்பட்டது.
பெரும்பாலான உறுப்பினர்கள் முன்னாள் முதல்வர் ஆனல்ட்டை ஆதரித்தனர். ஆனல்ட் மீண்டும் போட்டியிட்டால் முன்னணி, ஈ.பி.டி.பி என்பன ஆதரிக்காது என சிலர் தெரிவித்தனர். ஆனல்ட் மீண்டும் போட்டியிட சட்டத்தில் இடமில்லையென்றும் சிலர் தெரிவித்தனர். எனினும், அது தவறானது என்பதை சீ.வீ.கே.சிவஞானம் சுட்டிக்காட்டி, வரவு செலவு திட்டம் தோல்வியடைந்ததன் மூலம் பதவிவிலகியவர் மீண்டும் போட்டியிட முடியுமென்பதை விளக்கமளித்தார்.
அனைவரது கருத்துகளும் கேட்கப்பட்ட பின்னர் எதிர்வரும் 26 ஆம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் கூடி இறுதி முடிவை எடுப்பார்கள், வாக்கெடுப்பின் முதன் நாளான 29ஆம் திகதி முடிவு அறிவிக்கப்படும் என தெரிவித்து கூட்டம் முடிக்கப்பட்டது.
இதேவிதமாக, நல்லூர் பிரதேசசபை உறுப்பினர்களின் கருத்தறியும் கூட்டம், நாளை (24) இடம்பெறும்.
இதன்பின்னர், 26ஆம் திகதி கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்களான மாவை சேனாதிராசா, த.சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கூடி, யாழ் மாநகரசபை முதல்வர், நல்லூர் பிரதேசசபை தவிசாளர் யார் என்பதை முடிவு செய்வார்கள். 29ஆம் திகதி அந்த விபரங்கள் உறுப்பினர்களிற்கு அறிவிக்கப்படும்.