உலக நாடுகளால் தயாரிக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசிகளில் எது இலங்கையர்களுக்கு பொருத்தமானது என்பதை இலங்கை அரசாங்கம் 2021 ஜனவரியில் பரிந்துரைக்கவுள்ளது.
இதன் பின்னரே அந்த விடயம் உலக சுகாதார அமைப்புக்கு அறிவிக்கப்படும் என்று சுகாதார அமைச்சின் மூத்த அதிகாரி ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார் என ஆங்கில ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
சில நாடுகளால் தயாரிக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசிகள் தொடர்பில் ஆராய்வதற்காக இலங்கை அரசாங்கத்தினால் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த குழு இலங்கைக்கு எந்த தடுப்பூசி மிகவும் பொருத்தமானது என்பது குறித்து பல கூறுகளில் ஆராய்ந்து வருகிறது.
சில தடுப்பூசிகள் மறை 70 டிகிரி அல்லது மறை 20 டிகிரிகளில் சேமிக்கப்பட வேண்டும்.
இந்த நிலையில் தடுப்பூசிகளை இறக்குமதி செய்து சேமிக்க வேண்டிய வெப்பநிலை மற்றும் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுமா என்பது குறித்து அரசாங்கத்தின் குழு ஆராயவுள்ளது.
எனவே இந்த காரணிகள் அனைத்தும் மதிப்பீடு செய்யப்பட்டு, இலங்கைக்கு மிகவும் பொருத்தமானது எது என்பது குறித்து தீர்மானம் எடுக்கப்படும் என்றும் சுகாதார அமைச்சின் அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
ஆரம்பத்தில் இலங்கையின் 20 சதவீதத்தினருக்கு ஐக்கிய நாடுகள் சபை இலவசமாக தடுப்பூசிகளை வழங்கும், மீதமுள்ள மக்களுக்கான தடுப்பூசிகளை இலங்கை அரசாங்கம் கொள்வனவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் நேற்று இலங்கையின் பிரதமரை சந்தித்த ஐக்கிய நாடுகளின் அதிகாரிகள் கொரோனா தடுப்பூசிகளின் விநியோகத்துக்கான உறுதியை இலங்கை அரசாங்கத்துக்கு வழங்கியுள்ளனர்.