தமிழகத்தில் கத்தியால் குத்தப்பட்டு, சடலத்தை சுடுகாட்டில் வைத்து எரித்துள்ள சம்பவம் குறித்து பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த கொண்டங்கி அருகே மேலையூர் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரன். ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரியான இவருக்கு சதீஷ்குமார் என்ற 39 வயதில் மகன் உள்ளார்.
ரவுடியான சதீஷ்குமார் மீது சென்னையில் இருக்கும் பல்வேறு காவல்நிலையங்களில் வழக்குகள் உள்ளன.
இந்நிலையில், மேலையூர் கிராமப்பகுதியில் சுடுகாடு அருகே ஒரு ஆண் பிணம் கிடப்பதாக திருப்போரூர் பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, பொலிசார் அங்கு விரைந்து சென்று பார்த்த போது, அது சதீஷ்குமார் என்பது தெரியவந்தது.
இவருடைய அப்பாவின் சமாதிக்கு காரில் சதீஷ் சென்று கொண்டிருந்த போது, மர்மநபர்கள் இவரை வழிமறித்து கொலை செய்துள்ளனர்.
தலை, கழுத்து, வயிறு, கால் என மொத்த இடங்களையும் சரமாரியாக வெட்டி கொடூரமாக கொலை செய்துள்ளனர்.
அதுமட்டுமின்றி, சதீஷின் சடலத்தை அவரது அப்பாவின் சமாதிக்கே 500 கி.மீற்றர் தொலைவுக்கு இழுத்து சென்று போட்டு, அங்கேயே சடலத்தையும் எரித்துள்ளனர்.
கொல்லப்பட்ட சதீஷ்க்கு 3 மனைவிகள், முதல் மனைவி பிரிந்துவிட, 2-வதாக லட்சுமி என்பவரை திருமணம் செய்துள்ளார். அதன் பின் மூன்றாவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளார்.
இந்நிலையில் தான் சதீஷ், இரண்டாவது மனைவியுடன் வசித்து வந்துள்ளார். லட்சுமி ஏற்கனவே திருமணமானவர், அவருடைய முதல் கணவர் தான் சதீஷை கொடூரமாக கொலை செய்துள்ளார் என்றும் இதற்கு லட்சுமியும் உடந்தை என்று கூறப்படுகிறது.
சதீஷ் ரவுடி என்ற நிலையில், திருந்தி வாழ்வதற்காக கடந்த ஆண்டு பொலிசாரிடம் சதீஷ் மனு வழங்கி இருக்கிறார்.
அதற்கேற்றபடி சமீப காலமாக எந்த தவறையும் சதீஷ் செய்யாமல் இருந்து வந்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு சதீஷ், அமமுகவில் வர்த்தகப் பிரிவில் ஒரு பதவியை பெற்றார்.
மேலையூர் ஊராட்சி மன்ற தேர்தலில் தலைவர் பதவிக்கும் போட்டியிடப் போவதாகவும் கூறியுள்ளார். அதனால், பல்லாவரத்தில் இவரது ஒரு நிலத்தை விற்று ஒரு கோடி ரூபாய் வரை கையில் பணம் வைத்திருந்ததாகவும் சொல்லப்படுகிறது.
இந்த பணத்துக்கு ஆசைப்பட்டு லட்சுமியே சதீஷை கொன்றிருக்கலாமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதேசமயம், வேறு ஏதேனும் முன்பகை காரணமாக இருக்குமோ என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.