அமெரிக்க நகரமான கொலம்பஸ், ஓஹியோவில் கறுப்பின மனிதரை அமெரிக்க பொலிஸ் சுட்டுக் கொன்றதையடுத்து, அந்நாட்டில் மீண்டும் இன அநீதி மற்றும் பொலிஸ் மிருகத்தனத்திற்கு எதிராக ஒரு புதிய போராட்டத்தை தூண்டியுள்ளது.
ஆப்பிரிக்க-அமெரிக்க மனிதரான ஆண்ட்ரே மாரிஸ் ஹில், 47, கடந்த திங்கள்கிழமை இரவு ஒரு வீட்டின் கேரேஜில் இருந்தபோது, ஒரு சிறிய சம்பவத்திற்காக சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்ட ஒரு போலீஸ் அதிகாரி, ஆண்ட்ரே மாரிஸை சுட்டு கொன்றுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆண்ட்ரே மாரிஸை சுட்ட பொலிஸ் அதிகாரி ஆடம் கோயின் பாடிகேம் காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில், பொலிஸ் சம்பவ இடத்துக்கு வந்து உள்ளிருப்பவரை வெளியே வரச்சொல்லி எச்சரித்துள்ளனர்,
அப்போது ஆண்ட்ரே மாரிஸ் தனது இடது கையில் ஒரு செல்போனை எடுத்துக்கொண்டு பொலிஸ்காரரை நோக்கி நடந்து செல்வதை பார்க்கமுடிகிறது. அதே நேரத்தில் மாரிஸ் அவரது வலது கையை பின்புறமாக மறைத்து வைத்தபடி வந்துள்ளார்.
அவர் அப்படி முன்னேறி வருவதை பார்த்த அதிகாரி ஆடம் கோய் உடனடியாக தனது துப்பாக்கியால் சுட்டதில், ஆண்ட்ரே மாரிஸ் உடனடியாக கீழே சுருண்டு விழுந்தார். சம்பவ இடத்துக்கு மருத்துவ உதவி வரவழைக்கப்பட்டு, பின்னர் அங்கிருந்த லோக்கல் மருத்துவமனையில் மாரிஸ் உயிரிழந்தார்.
அதையடுத்து, பொலிஸ் அதிகாரி ஆடம் கோய் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் அவரது பேட்ஜ் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 3 வாரங்களில், ஆண்ட்ரே மாரிஸ் அமெரிக்காவில் பொலிஸாரால் கொல்லப்பட்ட இரண்டாவது ஆப்ரிக்க -அமெரிக்கராவார்.
23 வயதான கேசி குட்ஸன் ஜூனியர் என்பவர் கடந்த டிசம்பர் 4-ஆம் தேதி வீடு திரும்பும் போது பல முறை சுடப்பட்டார். அவர் தனது கையில் வைத்திருந்த ஒரு சாண்ட்விச்சை பொலிஸ் துப்பாக்கி என தவறாக நினைத்து சுட்டுள்ளனர்.
இந்நிலையில் நேற்று அமெரிக்காவில் மக்கள் மீண்டும் பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று போராட்டங்களை தொடங்கியுள்ளனர்.
ஏற்கெனெவே, ஆப்ரிக்க-அமெரிக்கரான ஜார்ஜ் ஃபிலாய்டு கொல்லப்பட்ட சமத்துவம் உலகம் முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.