உலகையே மிரட்டி கொரோனா வைரஸ் அடுத்த 10 ஆண்டுகளுக்கு நம்முடன் இருக்கும் என்று தடுப்பூசி உருவாக்கிய மூத்த ஆய்வாளர் கூறியுள்ளார்.
கொரோனா என்னும் கொடிய வைரஸ் உலகையே ஆட்டிப் படைத்து வருகிறது. இந்த வைரஸ் காரணமாக பல லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனால் இந்த நோயை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசி தீவிரமாக உருவாக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் பைசர் நிறுவனம், இந்த கொரோனாவிற்கான தடுப்பூசியை உருவாக்கியுள்ளது.இந்த தடுப்பூசி பிரித்தானியா, கனடா, அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகளில் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது.
உலகிலேயே பொதுமக்கள் பயன்பாட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட முதல் தடுப்பூசி பைசர் தடுப்பூசிதான்.
இந்நிலையில், குறைந்தது அடுத்த பத்து ஆண்டுகளுக்காவது கொரோனா வைரஸ் தொடர்ந்து இருக்கும் என பைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பைசர் கொரோனா தடுப்பூசியை உருவாக்கிய மூத்த ஆய்வாளர் உகுர் சகின் கூறுகையில், அடுத்த பத்து ஆண்டுகளுக்காவது கொரோனா வைரஸ் நம்முடன் இருக்கும். பல்வேறு இடங்களில் திடீரென கொரோனா பரவத் தொடங்கும். இயல்புநிலைக்கே நமக்கு புதிய வரையறை வேண்டும்.
புதிய இயல்புநிலை என்றால் எல்லா நாடுகளும் முழு ஊரடங்கு அமல்படுத்தவேண்டுமென அர்த்தமில்லை. கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்த வேண்டிய சூழல் கோடைக்காலத்தின் இறுதிக்குள் முடிவுக்கு வந்துவிடும் என்று தெரிவித்துள்ளார்.