சுனாமி நினைவேந்தல் நிகழ்வுகளை சுகாதார நடைமுறைகளை பின்பற்றி நடாத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
கடந்த 2004 ம் ஆண்டு பாதிப்பை ஏற்படுத்திய ஆழிப்பேரலை சுனாமி இயற்கை அனர்த்தத்தினால் காவு கொள்ளப்பட்டோரின் 16 ம் ஆண்டு நினைவு நிகழ்வு நாளை இடம்பெறவுள்ள நிலையில் தற்போது உள்ள கொரோனா பரவல் அச்சநிலையை கருத்தில் கொண்டு சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றி சுகாதார வைத்திய அதிகாரியின் அனுமதியுடன் குறித்த நினைவேந்தல் நிகழ்வுகளை மட்டுப்படுத்தப்பட்டளவில் நடாத்த முடியும் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்தார்.
மேலும் தற்போது நாட்டில் உள்ள கொரோனா தொற்று அச்ச நிலைமை காரணமாக ஒன்று கூடல்கள் மற்றும் பொது நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த சுனாமி இடரால் உயிரிழந்தோரை நினைவு கூரும் நிகழ்வுகளை அப்பகுதி சுகாதார பிரிவினரின் அனுமதியுடன் மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையான மக்களுடன் குறித்த நிகழ்வுகளை நடாத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.