தமிழகம் முழுவதும் 46 ஆயிரம் நிலையங்களில் தடுப்பூசி செலுத்துவதற்கு 21 ஆயிரம் தாதியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுவதாக சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், நவம்பர் 25 ஆம் திகதியில் இருந்து கடந்த 23 ஆம் திகதி வரை வெளிநாடுகளில் இருந்து வந்த 38 ஆயிரம் பேரின் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
அவர்கள் அனைவரும் வீட்டு கண்காணிப்பில் உள்ளதாகவும் இங்கிலாந்தை போல தென் ஆபிரிக்காவில் இருந்து வருபவர்களையும் கண்காணித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தமிழகத்தில் முதல்கட்டமாக 5 லட்சம் சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்த 5 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இது உருமாற்றம் அடைந்த வைரசா எனக் கண்டறிய ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் குறித்துப் பொதுமக்கள் பதற்றம் அடையாமல், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தொடர்ந்து பின்பற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
இதனிடையே, பிரிட்டனில் இருந்து நவம்பர் 25 ஆம் திகதி முதல் கடந்த 23 ஆம் திகதி வரை தமிழகத்திற்கு வந்தவர்கள், கொரோனா பரிசோதனை செய்து கொள்ளும்படி, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குனர் கேட்டுக் கொண்டுள்ளார்.