கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே அழகு நிலைய பெண் உடலில் மின்சாரம் பாய்ச்சி கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முகத்தில் பூசிய பவுடரால் 51 வயது பெண்மணியை காதலித்து சொத்துக்காக திருமணம் செய்த 26 வயது இளைஞர் செய்த விபரீத செயல் பொலிஸ் விசாரணையில் அம்பலமானது.
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே காரகோணம் பகுதியை சேர்ந்த சகாவுக்கு சொந்தமாக சுமார் பத்து ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. வசதி வாய்ப்பாக வாழ்ந்த இவர் வீட்டோடு மாப்பிள்ளைக்காக காத்திருந்ததால் திருமணம் தள்ளிப்போனது.
இந்த நிலையில் தனியார் மருத்துவமனையில் வரவேற்பாளராக பணியாற்றி வரும் அருண் என்ற 26 வயது இளைஞருக்கும், சகாவுக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தேவாலயத்தில் வைத்து கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடந்தது.
இந்த நிலையில் சம்பவத்தன்று சமையல் செய்யும் போது தனது மனைவி சகா மின்சாரம் தாக்கி பலியானதாக அக்கம் பக்கத்தினரிடம் கண்ணீர் விட்டு கதறியுள்ளான் அருண். உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சகாவின் சடலத்தை கைப்பற்றிய காவல் துறையினர் அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். அப்போது ஒரு பெண், வீட்டோடு மாப்பிள்ளையாக வந்த அருண் கடந்த சில தினங்களாக , சகாவிடம் சண்டையிட்டு வந்ததாக தெரிவித்தனர். இதையடுத்து அருணை அழைத்துச்சென்று சிறப்பு கவனிப்புடன் விசாரித்த போது மேக்கப் பவுடரால் காதலில் விழுந்து, வாழ்க்கையில் வழுக்கிய சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.
சகா 51 வயதிலும் முகத்தில் பவுடர் பூசி பள பளப்பாக இளம் பெண் போல வலம் வந்ததால் அவரது அழகில் ஸிலிப்பாகிய அருண் காதலில் விழுந்துள்ளார். ஒரு கட்டத்தில் தன் காதலிக்கும் சகாவுக்கு 51 வயது என்று தெரியவந்ததும் காதலியை கழட்டிவிட திட்டமிட்டுள்ளான்.
ஆனால் சகா பெயரில் 10 ஏக்கர் நிலம், தினமும் ஆயிரக்கணக்கில் அழகு நிலைய வருமானமும் வருவதால், வேலைக்கே செல்லாமல் வீட்டிலேயே அமர்ந்து சாப்பிடும் யோகம் இருப்பதால் திருமணத்துக்கு சம்மதித்துள்ளான் அருண்.
ஆனால் அருண் வீட்டில் அம்மா வயது பெண்ணை திருமணம் செய்து கொள்ள எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதனை மீறி தேவாலயத்தில் வைத்து காதலி சகாவை உறவினர்கள் புடை சூழ திருமணம் செய்து கொண்டு வீட்டோடு மாப்பிள்ளையாக குடித்தனம் நடத்தி வந்துள்ளார் அருண்.
திருமணத்திற்கு பின்னர் தன்னை கவனிக்காமல் மனைவி அவரது வயதான தாயை கவனித்துக் கொள்வதிலேயே ஆர்வம் காட்டியதால், அதிருப்பதியான அருண் அடிக்கடி சகாவிடம் சண்டையிட்டுள்ளார். கணவன் சிறுபிள்ளை என்பதால் சண்டையிடுவதாக எண்ணி அதனை பெரிது படுத்தாமல் சகா அழகு நிலையத்திற்கு சென்று வந்துள்ளார்.
இந்த நிலையில் சகா தனது திருமண புகைபடத்தை முக நூலில் பதிவிட்டு அருணின் நண்பர்களுக்கும் ஷேர் செய்ததாக கூறப்படுகின்றது. இதையடுத்து அருணை தொடர்பு கொண்ட நண்பர்கள் அவனை பாட்டி ஹீரோ என்று கிண்டல் செய்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த அருண், சகாவை கொலை செய்து விட்டு மொத்த சொத்துக்களையும் அடைய திட்டமிட்டுள்ளான்.
வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்த சகாவை மின்சார அடுப்பில் தள்ளி கொலை செய்ய முயன்றுள்ளான். அதிர்ஷடவசமாக அருணிடம் இருந்து தப்பிய சகா, தனக்கு நடந்த கொடுமை குறித்து பக்கத்து வீட்டு பெண்ணிடம் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று சகாவை அடித்து உதைத்து மின்சார வயரை உடலில் சுற்றி மின்சாரத்தை பாய்ச்சி கொலை செய்து விட்டு அவர் மின்சாரம் தாக்கி பலியானதாக நாடகமாடியது வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக தெரிவித்த காவல்துறையினர், பாட்டி ஹீரோ அருணை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் கவனிக்க ஆளின்றி தவித்த சகாவின் வயது முதிர்ந்த தாயை காப்பகத்தில் சேர்க்க ஏற்பாடு செய்தனர்.