நுவரெலியா மாவட்டத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் எதிர்வரும் ஜனவரி மாதம் நிறைவடையும் வரை சிவனொளிபாத மலைக்கு வருவதை தவிர்த்துக்கொள்ளுமாறு நுவரெலியா மாவட்ட செயலாளர் எம்.பி.ஆர்.புஷ்பகுமார கோரிக்கை விடுத்துள்ளார்.
நுவரெலியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ளமை தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக எம்.பி.ஆர்.புஷ்பகுமார மேலும் கூறியுள்ளதாவது, “நுவரெலியா மாவட்டத்தில் இதுவரை 400 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மக்கள் ஒன்று கூடினால் வைரஸ் வேகமாக பரவும் அபாயம் இருக்கின்றது. நெருக்கடி நிலைமை தொடர்பில் சுகாதார தரப்புடன் ஆலோசனை நடத்தினோம். இதன்பிரகாரம் ஜனவரி மாதம் நிறைவடையும் வரை சிவனொளிபாத மலைக்கு யாத்திரை வரவேண்டாம் என அடியார்களிடம் கேட்டுக்கொள்கின்றேன்.
சிவனொளிபாதமலை மூடப்படவில்லை. ஆனாலும் ஜனவரி மாதம் இறுதிவரை நிலைமைகள் அவதானிக்கப்பட்டு, வழிபாடுகளுக்காக பக்த அடியார்களை அனுமதிப்பது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும்.
தற்போதைய நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வந்தால், சுகாதார நடைமுறைகள் மற்றும் சில கட்டுப்பாடுகளுடன் பெப்ரவரி மாதம் முதல் சிவனொளிபாத மலைக்கு செல்வதற்கு அனுமதி வழங்கப்படும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.