ரஷ்யாவில் உள்ள அமெரிக்க நாட்டு தூதரக அதிகாரிகளை வெளியேற்ற மறுத்துள்ள அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஒரு சிறந்த தலைவர் என டொனால்ட் டிரம்ப் புகழாரம் சூட்டியுள்ளார்.
நடந்து முடிந்த அமெரிக்க தேர்தலில் டொனால்ட் டிரம்ப் அபாரமாக வெற்றி பெற்றார். ஆனால், இவரது வெற்றி பல்வேறு சர்ச்சைகளை எழுப்பியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள ரஷ்ய நாட்டு தூதரக அதிகாரிகளின் உதவியுடன் கணணிகள் ஹேக் செய்யப்பட்டு ஹிலாரி தோற்கடிக்கப்பட்டதாக பரபரப்பு தகவல்கள் வெளியானது.
இத்தகவல்களை தொடர்ந்து அமெரிக்காவில் இருந்த சந்தேகத்திற்குரிய 35 ரஷ்ய தூதரக அதிகாரிகளை உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாரு ஜனாதிபதி ஒபாமா உத்தரவிட்டார்.
ஒபாமாவின் இந்த உத்தரவை தொடர்ந்து பழிக்கு பழி வாங்க ரஷ்ய ஜனாதிபதியும் தனது நாட்டில் உள்ள அமெரிக்க தூதர்களை வெளியேற்றுவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது.
ஆனால், இதனை பொய்யாக்கும் வகையில் புடின் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதில் ‘எப்போதும் நான் கீழ்த்தரமான அரசியலை செய்ய மாட்டேன். அமெரிக்க தூதர்களை வெளியேற்றும் எண்ணம் இல்லை.
மேலும், புத்தாண்டு தின கொண்டாட்டத்தில் பங்கேற்க அமெரிக்க தூதரக அதிகாரிகளின் குழந்தைகளை கிரம்ளின் மாளிகைக்கு வர அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
ரஷ்யா ஜனாதிபதியின் இந்த அறிவிப்பை அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் புகழ்ந்து வரவேற்றுள்ளார்.
ட்விட்டர் பக்கத்தில் டிரம்ப் வெளியிட்டுள்ள தகவலில், ‘பழிக்கு பழி வாங்கும் நடவடிக்கையை மேற்கொள்ளாமல் புடின் சிறந்த தலைவராக செயல்பட்டுள்ளார்’ என கருத்து தெரிவித்துள்ளார்.
டொனால்ட் டிரம்பின் இக்கருத்தை தொடர்ந்து ‘அமெரிக்க ஜனாதிபதியான ஒபாமா மீது இல்லாத விசுவாசம் ரஷ்யா ஜனாதிபதியான புடின் மீது டிரம்பிற்கு உள்ளதாக’ விமர்சனங்கள் எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.