மூத்தோருக்கான இல்லம் ஒன்றில் வசிக்கும் 101 வயது பெண்மணிதான் ஜெர்மனியில் கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்ட முதல் நபர். நேற்று (26) அவருக்கு தடுப்பூசி போடப்பட்டது.
ஜெர்மனியின் கிழக்கு மாநிலமான சாக்சோனி அன்ஹால்டில் உள்ள மூத்தோர் இல்லத்தில் எடித் வோய்சலா எனும் அந்த மூதாட்டியுடன் அங்கு வசிக்கும் சுமார் 40 முதியோர், 10 ஊழியர்கள் ஆகியோருக்கும் ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசி நேற்று போடப்பட்டதாக அந்த இல்லத்தின் மேலாளர் டோபியாஸ் க்ரூகெர் ஏஎஃப்பி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இன்று முதல் ஜெர்மனியிலும் ஐரோப்பிய ஒன்றியத்திலும் தடுப்பூசி போடும் பணி தொடங்கும் என்று கூறப்பட்டிருந்தது.
ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசி மருந்துகள் பல்வேறு வட்டார சுகாதார நிலையங்களுக்கு நேற்று விநியோகம் செய்யப்பட்டன. மூத்தோர் பராமரிப்பு இல்லவாசிகள், 80 வயதுக்கு மேற்பட்டவர்கள், பராமரிப்பு ஊழியர்கள் ஆகியோருக்கு தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொவிட்-19 முதல் அலையை சிறப்பாகக் கையாண்ட ஜெர்மன், தற்போது பரவும் இரண்டாவது அலையில் தொற்று எண்ணிக்கை பெருமளவு அதிகரிப்பதால் திணறி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 14,455 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதாகவும் 240 பேர் உயிரிழந்ததாகவும் கூறப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஜெர்மனியில் இதுவரை 29,422 பேர் கொவிட்-19 ஆல் உயிரிழந்ததாகக் கூறப்பட்டது.