புதிய ஆண்டில் சாந்தி சமாதானத்திற்காக போராட வேண்டிய கடப்பாட்டில் உள்ளோம் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
அவரால் இன்று வெளியிடப்பட்டுள்ள புத்தாண்டு செய்தியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். இச்செய்திக்குறிப்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
பல்லின மத, கலாச்சார பின்னணியை கொண்ட எனது வன்னி தேர்தல் மாவட்டத்தில் வாழும் அனைத்து கிறிஸ்தவ மக்களுக்கும், கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களுக்கும் இயேசு பெருமான் கொண்டு வந்த சாந்தி, சமாதானம், நல்லிணக்கம், சகவாழ்வு, உரிமையோடு கூடிய நல்வாழ்வு உங்கள் உள்ளங்களிலும் , இல்லத்திலும் முழு சமூகத்திலும் மலர எனது ஆசியுடன் கூடிய நல்வாழ்த்துக்கள்.
பிறக்கவிருக்கும் புதிய ஆண்டில் நாங்கள் ஒவ்வொருவரும் இதற்காக உழைக்கவும்,கைகோர்த்து நிற்கவும், போராட வேண்டிய கடமைப்பாட்டிலுள்ளோம்.
வேற்றுமைகள் நமது வாழ்வின் யதார்த்தமாக இருந்தாலும் வேற்றுமையிலும், ஒற்றுமையை கண்டுகொள்ள அழைக்கப்படுகின்றோம்.
இன்று உலக நாடெங்கிலும் ஏன் நமது நாட்டிலும் பரவி எல்லோரையும் பாதிப்புக்குள்ளாக்கி வருகின்ற இந்த கொரோனா நோயின் தாக்கத்தின் பிடியிலிருந்தும் நம்மையும்,நம்மை சார்ந்த ஒவ்வொருவரையும் பாதுகாத்துக்கொள்ள சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றி அனைத்து இடங்களிலும் சமூக இடைவெளியினை கடைப்பிடித்து வாழ வேண்டிய கடப்பாட்டில் உள்ளோம் என தெரிவித்துள்ளார்.