பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான ஆயிரம் ரூபாய் சம்பள அதிகரிப்பு தொடர்பாக இன்று (வியாழக்கிழமை) நடைபெறவிருந்த பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அறிவித்துள்ளது.
இதனையடுத்து, இந்த பேச்சுவார்த்தை எதிர்வரும் ஜனவரி 7ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
சம்பள அதிகரிப்பு, தோட்ட தொழிலாளர்களுக்கான நலன்புரி திட்டங்கள் மற்றும் கூட்டு ஒப்பந்த திருத்தம் தொடர்பாக இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு கடந்த 21ஆம் திகதி தொழில் அமைச்சர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது தீர்மானிக்கப்பட்டிருந்தது.
எனினும் கடந்த 17ஆம் திகதி கண்டியில் இடம்பெற்ற முக்கிய நிகழ்வொன்றில் கலந்துகொண்ட அக்கரப்பத்தனை பிரதேச சபை தவிசாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இவ்வாறான நிலைமையால் இன்று பேச்சுவார்த்தையை நடத்த முடியாதுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் குறிப்பிட்டுள்ளது.
குறித்த நிகழ்வில் கலந்துகொண்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மருதுபாண்டி ராமேஸ்வரம உள்ளிட்ட சிலர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ள இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கு தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ள போதிலும் ஏனையவர்களுக்கான பி.சி.ஆர் அறிக்கை கிடைக்கவில்லை என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அறிவித்துள்ளது.
இதனால் தனிமைப்படுத்தல் சட்டவிதிகளை மீறி இன்று ஏற்பாடு செய்யப்பட்ட பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள பேச்சுவார்த்தையில் பங்கேற்பதில்லை என காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.
இந்நிலையில், இந்த பேச்சுவார்த்தை எதிர்வரும் ஜனவரி 7ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.