குளிர்காலத்தில் மாலை வேளையில் காபி, டீ குடிக்கும் போது சூடாகவோ, காரசாரமாகவோ அல்லது மொறுமொறுப்பாகவோ ஏதேனும் சாப்பிடத் தோன்றும். அப்போது நம்மில் பலர் செய்து சாப்பிடுவது பக்கோடாவாகத் தான் இருக்கும். பக்கோடாவில் பல வகைகள் உள்ளன. அதில் நாம் வெங்காய பக்கோடாவைத் தான் அதிகம் செய்து சுவைத்திருப்போம். ஆனால் பன்னீரைக் கொண்டும் அற்புதமான சுவையில் பக்கோடா செய்யலாம் என்பது தெரியுமா?
கீழே அந்த பன்னீர் பக்கோடாவின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பன்னீர் – 200 கிராம்
* தக்காளி கெட்சப் – தேவையான அளவு
* எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு
மாவிற்கு…
* கடலை மாவு – ஒரு கப்
* அரிசி மாவு அல்லது சோள மாவு – கால் கப்
* ஓமம் – கால் டீஸ்பூன்
* சாட் மசாலா பவுடர் – 2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் – ஒரு டீஸ்பூன்
* உப்பு – சுவைக்கேற்ப
* தண்ணீர் – தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்றவும்.
* அதே சமயம் ஒரு பௌலில் கடலை மாவு, அரிசி மாவு அல்லது சோள மாவு, ஓமம், சாட் மசாலா, மிளகாய் தூள், உப்பு ஆகியவற்றை எடுத்து, அதில் நீரை ஊற்றி பக்கோடா மாவு பதத்திற்கு ஓரளவு கெட்டியாக கலந்து கொள்ள வேண்டும்.
* பின் பன்னீரை எடுத்து, மெல்லிய செவ்வக துண்டுகளாக வெட்டவும். பின்பு ஒரு பன்னீர் துண்டை எடுத்து, அதன் மேல் கெட்சப்பை பரப்பி, பின் அதன் மேல் மற்றொரு பன்னீரை வைக்க வேண்டும்.
* இப்போது அதை மாவில் பிரட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், பன்னீர் பக்கோடா தயார். இதேப் போல் அனைத்து பன்னீரையும் போட்டு எடுங்கள்.