யாழ்ப்பாணத்தில் வீடு புகுந்து திருட முற்பட்ட முகமூடிக் கொள்ளையர்கள் பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு, துவைக்கப்பட்டு குற்றுயிரும் குறையுயிருமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
கொள்ளையர்களின் வாள்வெட்டில் காயமடைந்த இளைஞன் ஒருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தென்மராட்சி, விடத்தற்பளை பகுதியில் இன்று (1) அதிகாலை இந்த பரபரப்பு சம்பவம் நடந்தது.
கறுப்பு நிறதுணிகளால் முகத்தை மூடிக்கட்டி, வாள்களுடன் கொள்ளையர் கும்பலொன்று விடத்தற்பளையிலுள்ள வீடொன்றிற்குள் நுழைந்துள்ளது.
எனினும், எச்சரிக்கையடைந்த வீட்டுக்காரர்கள் கத்திக்கூச்சலிட அயல்வீட்டினர் அங்கு சென்றுள்ளனர். அயலவர்கள் வருவதையடுத்த கொள்ளையர்கள் தப்பியோட முயன்றனர். திருடன் ஒருவனை, அயல்வீட்டு இளைஞன் பிடிக்க முற்பட்ட போது, அவர் மீது திருடர்கள் வாள்வெட்டு நடத்தினர்.
இதில் விடத்தற்பளையை சேர்ந்த சிவராசா நிரோசன் (28)
என்பவர் காயமடைந்தார்.
இதை தொடர்ந்து மேலும் பலர் கூடி திருடர்களை விரட்ட தொடங்கினர். இந்த பரபரப்பையறிந்து இராணுவத்தினரும் களமிறங்கி திருடர்களை வளைத்தனர்.
பொதுமக்கள், இராணுவம் இணைந்து இரண்டு திருடர்களை மடக்கிப் பிடித்தனர்.
மடக்கிப்பிடிக்கப்பட்ட திருடர்கள் பொதுமக்களால் அடித்து துவைக்கப்பட்டனர். இருவரும் குற்றுயிரும் குறையுயிருமாக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
கெற்பேலியை சேர்ந்த திருட்டு கும்பலே சிக்கியது.
கந்தசாமி சிவநேசன் (33) என்ற திருடனின் தலையில் பெரும் வெட்டுக்காயம் ஏற்பட்டுள்ளது. அ.ஜெனூசன் (21) என்ற திருடனின் தலையிலும் பெரும் வெட்டுக்காயம் ஏற்பட்டது. ஜெனூசன் என்ற திருடனின் கை, கால்களும் பொதுமக்களின் தாக்குதலில் உடைந்துள்ளது.
திருடர்களின் தாக்குதலில் காயமடைந்த இளைஞனும், இரண்டு திருடர்களும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.