சுவிட்சர்லாந்துக்கு சுற்றுலா வந்துள்ள நிலையில், திடீரென்று புதிய கொரோனா பரவலை காரணமாக கூறி தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியதாக பிரித்தானியர் ஒருவர் இழப்பீடு கோரியுள்ளார்.
கிறிஸ்துமஸ் விடுமுறையை கழிக்க ஏராளமான பிரித்தானியர்கள் சுவிட்சர்லாந்துக்கு சுற்றுலா சென்றனர்.
திடீரென்று புதிய கொரோனா பரவலை கருத்தில் கொண்டு, சுற்றுலாப் பயணிகள் அனைவரையும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த சுவிஸ் நிர்வாகம் உத்தரவிட்டது பிரித்தானியர்களிடையே சலசலப்பையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இதனால் Verbier பகுதியில் மட்டும் சுமார் 400 பிரித்தானியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் தனிமைப்படுத்தலுக்கு பயந்து இரவோடு இரவாக வெளியேறியுள்ளனர்.
இந்த விவகாரம் ஒட்டுமொத்த ஐரோப்பிய நாடுகளில் பேசு பொருளாக மாறியது. மட்டுமின்றி பல பிரித்தானியர்கள் இந்த விவகாரம் தொடர்பில் புகாரும் தெரிவித்துள்ளனர்.
கிறிஸ்துமஸ் பண்டிகை காலம் என்பதால் ஹொட்டல் மற்றும் விமான சேவைக்கு அதிக கட்டணம் செலுத்தியுள்ள நிலையில்,
திடீரென்று 10 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்பட வேண்டும் எனவும், நாடு திரும்புவதற்காக விமான முன்பதிவை மறு திகதிக்கு மாற்ற வேண்டும் என கோருவது உண்மையில் நடைமுறைக்கு சாத்தியமற்றது என பல பிரித்தானியர்கள் கொந்தளித்துள்ளனர்.
நிலைமை இவ்வாறிருக்க, சுவிஸ் நிர்வாகம் தங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.
கொரோனா பரிசோதனையில் தொற்று இல்லை என உறுதியான பின்னரும் ஹொட்டல்களில் தங்களை மோசமாக நடத்தப்பட்டதாக சிலர் புகார் அளித்துள்ளனர்.