உலகிலேயே கொரோனாவால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள 2வது நாடு இந்தியா.
இங்கு கொடிய வைரஸ் பரவ ஆரம்பித்ததிலிருந்து இதுவரை 10.3 மில்லயன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், மேலும் 1,49,435 பேர் இறந்துள்ளனர்.
நாளுக்கு நாள் தொற்று அதிகரித்துக்கொண்டே இருக்க, சமீபத்தில் பிரித்தானியாவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸின் பாதிப்புகளும் இந்தியாவில் பதிவாகியுள்ளன.
இந்த நிலையில், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் AstraZeneca நிறுவனம் இணைந்து கண்டுபிடித்த தடுப்பூசியை இந்திய அரசாங்கம் நேற்று அங்கீகரித்தது.
அதனைத் தொடர்ந்து இப்போது, ஹைதராபாத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் Bharat BioTech எனும் உள்நாட்டு நிறுவனத்தின் தடுப்பூசிக்கும் இந்திய அரசாங்கம் அங்கீகாரம் அளித்துள்ளது.
இரு மருந்து உற்பத்தியாளர்களும் தங்களது தடுப்பூசிகளைப் பயன்படுத்துவது பாதுகாப்பானது என்பதைக் காட்டும் தரவை சமர்ப்பித்ததாக இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஜெனரல் (DCGI) தெரிவித்துள்ளார்.
இந்தியா ஜூலை 2021-க்குள் சுமார் 300 மில்லியன் மக்களுக்கு நோய்த்தடுப்பு ஊசி போட திட்டமிட்டுள்ளது. சுகாதாரப் பணியாளர்கள், அவசர சேவைகள் மற்றும் பெரியவர்கள் அல்லது மருத்துவ ரீதியாக பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு முன்னுரிமை அளிக்கவுள்ளது.
இதற்கிடையில், ஐரோப்பா, பிரித்தானியா மற்றும் அமேரிக்கா உள்ளிட்ட நாடுகளில் அங்கீகரிக்கப்பட்டுள்ள Pfizer நிறுவனம், இந்தியாவிலும் அதன் அங்கீகாரத்துக்கு கோரியுள்ளது.