அ.தி.மு.க பொதுச் செயலாளராக, சசிகலா பொறுப்பேற்றதற்கு கிளம்பியுள்ள எதிர்ப்பு, தமிழ்நாடு மாநிலத்தின் பல பகுதிகளுக்கும் பரவியுள்ளது.
சசிகலாவை ஏற்றுக் கொள்ள முடியாமல், கட்சியின் பல்வேறு பொறுப்புகளில் உள்ள, இரண்டாம் கட்ட நிர்வாகிகள், பதவியை ராஜினாமா செய்து வருகின்றனர்.
சென்னையில் நேற்று முன்தினம் கட்சித் தொண்டர் ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். மற்ற சில பகுதிகளில், கொடும்பாவி எரித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அ.தி.மு.க பொதுச்செயலராக சசிகலா நேற்று முன்தினம் பொறுப்பேற்றார். ‘தனக்கு சாதகமான பொதுக் குழு உறுப்பினர்களை மட்டும் அழைத்து, சசிகலா பொதுச்செயலாளராகி உள்ளார்.
முன்னணித் தலைவர்கள், தொண்டர்களின் எண்ணங்களுக்கு மாறாக, பதவி சுகத்தில் உள்ளவர்கள் சசிகலாவை ஆதரித்துள்ளனர்’ என கட்சியில் பெரும்பாலானோர் கொதித்துப் போயுள்ளனர்.
ஜெயலலிதாவின் ஆதரவாளர்கள் தங்கள் ஆதங்கத்தையும், கோபத்தையும் பல விதங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர்.
ஈரோடு மாநகர் மாவட்ட மீனவரணி செயலரும், தமிழ்நாடு அரசு வக்பு வாரிய உறுப்பினருமான பாரூக், ஈரோடு மாநகர் மாவட்ட அம்மா பேரவை மாவட்டத் தலைவர் கவுரி சங்கர், மாநகர் எம்.ஜி.ஆர் மன்ற துணைச் செயலர், ஈரோடு மாநகர் அம்மா பேரவை இணை செயலர் ஆகியோர், சசிகலாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தங்கள் கட்சி பதவியை நேற்று முன்தினம் ராஜினாமா செய்தனர்.
பதவியை ராஜினாமா செய்த அவர்கள் கூறியதாவது:
தொண்டர்களின் எண்ணங்களுக்கு மாறாக எம்.எல்.ஏக்கள், மாவட்ட செயலர்கள், எம்.பிக்கள் மூலம் பொதுச்செயலர் பதவியை சசிகலா அபகரித்துள்ளார். ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா கட்சிக்கு வருவதை எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம். அவரால் மட்டுமே கட்சியைக் காப்பாற்ற முடியும். ஆட்சி, பதவி சுகத்துக்காகவே முன்னணி மற்றும் மூத்த தலைவர்கள் சசிகலாவை ஆதரிக்கின்றனர்.தொண்டர்கள், பொதுமக்கள் முழுமையாக எதிர்க்கின்றனர். அ.தி.மு.கவுக்கு சமாதி கட்டி, இரண்டு நாட்களாகி விட்டது. எதிர்வரும் நாட்களில் மேலும் பல நிர்வாகிகள், பதவி மற்றும் கட்சியில் இருந்து விலகுவர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
இது இவ்விதமிருக்க சசிகலா நியமனத்தால் அதிருப்தியடைந்த, பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நுாற்றுக்கும் மேற்பட்ட அ.தி.மு.க கிளை நிர்வாகிகள் ஒன்றிணைந்து, ‘புரட்சி மலர் ஜெ.தீபா பேரவை’ என்ற பெயரில் திருச்சியில் புதிய அமைப்பை தொடங்கியுள்ளனர்.
இதற்கான தொடக்க விழா ஸ்ரீரங்கத்தில் நேற்று முன்தினம் நடந்தது.திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளராக செயல்படும் ரங்கராஜ் கூறியதாவது:
புதிய தலைமை பிடிக்கவில்லை. அதே நேரத்தில் தீபா, கட்சித் தலைமைப் பொறுப்பை ஏற்று நடத்த வேண்டும் என விரும்புபவர்கள் ஒருங்கிணைந்து, புதிய பேரவையை தொடக்கி உள்ளோம். 10 மாவட்டங்களைச் சேர்ந்த, அ.தி.மு.க கிளை செயலர்கள் இங்கு வந்துள்ளனர்.இப்போதைக்கு ஒருங்கிணைப்பாளர்களை மட்டும் நியமித்து, உறுப்பினர்கள் சேர்க்கையை தொடக்கி உள்ளோம். இதுவரை, 1,000 பேரை உறுப்பினர்களாக சேர்த்துள்ளோம். அனைத்து மாவட்டங்களிலும் புதிய உறுப்பினர்களை சேர்த்த பின்னர், தீபாவை நேரில் சந்தித்து, பேரவைக்கான அங்கீகாரத்தை பெறத் திட்ட மிட்டுள்ளோம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதேவேளை கடலுாரில், சசிகலா பதவி ஏற்றதைக் கண்டித்தும், பதவி விலகக் கோரியும், நேற்றுமுன்தினம் பலர் கறுப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், அ.தி.மு.கவின் மகளிரணி, வழக்கறிஞரணியைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.
அதே போல, புதுக்கோட்டை மாவட்டம் மறமடக்கி கிராமத்தில், சசிகலாவின் உருவப்பொம்மையை எரித்து, அ.தி.மு.கவினர் சிலர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதேபோல, மாநிலத்தின் பல பகுதிகளிலும் சசிகலாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, போராட்டங்கள் நடந்து வருகின்றன.
வேலுார், காட்பாடி அக்ரஹாரம் பெண்கள் மேல்நிலைப் பாடசாலை அருகில் தீபாவை வாழ்த்தி, அ.தி.மு.கவினர் சிலர் நேற்று முன்தினம் பேனர் வைத்தனர். காட்பாடி, அ.தி.மு.க பகுதி செயலரின் ஆதரவாளர்கள், அங்கு வந்து பேனரை அகற்ற முயன்றனர். இதனால், இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது; ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டனர். பின், இரு தரப்பினரும், தனித்தனியாக பொலிசில் புகார் செய்தனர்.
ஜெயலலிதா நினைவிடத்தில் தற்கொலை முயற்சி:ஜெயலலிதா மீதுள்ள பற்றுதல் காரணமாக அவர் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள எம்.ஜி.ஆர் நினைவிடத்திற்கு, தினமும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வந்து செல்கின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் சசிகலாவை வசைபாடிச் செல்கின்றனர்.
அ.தி.மு.க பொதுச் செயலாளராக, சசிகலா நேற்றுமுன்தினம் முறைப்படி பதவியேற்ற நிலையில், ஜெயலலிதா நினைவிடத் தில், காலை, 11:30 மணிக்கு தொண்டர் ஒருவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இதுகுறித்து பொலிசார் கூறியதாவது:
தற்கொலைக்கு முயன்றவர், திருவள்ளுர் மாவட்டம் காரனோடையைச் சேர்ந்த சிவாஜி ஆனந்த(50 வயது). ஜெயலலிதா நினைவிடத் தில் திடீரென விஷம் குடித்து அவர் தற்கொலைக்கு முயன்றார். அவரை சிகிச்சைக்காக, சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளோம்.
‘ஜெயலலிதா இருந்த பொறுப்புக்கு, சசிகலா வருவதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை; அவர் பொதுச்செயலராக பதவியேற்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, தற்கொலைக்கு முயன்றேன்’ என, சிவாஜி ஆனந்த் கூறினர்.
இது குறித்து, அண்ணா சதுக்கம் பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.இவ்வாறு பொலிசார் கூறினர்.
இது ஒருபுறமிருக்க ‘-கட்சியும், ஆட்சியும் உங்களோடு; மக்களும், தொண்டர்களும் எங்களோடு’ என்ற கோஷத் துடன் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, மக்களிடம் நீதி கேட்கும் பயணம் செல்ல திட்டமிட்டுள்ளார்.
இதேசமயம் அதிமுகவின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கும் சசிகலாவை வாழ்த்தியும், தனக்கு இருக்கும் சில சந்தேகங்கள் பற்றியும் அப்துல் கலாம் இலட்சிய இந்தியா கட்சியின் நிறுவனரான பொன்ராஜ் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
33 ஆண்டு கனவை நனவாக்கி, அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பு ஏற்றிருக்கும் சசிகலா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.செல்வி ஜெயலலிதா இன்றைக்கு மறைந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் அஞ்சலி செலுத்துகிறார்கள்.
பொதுமக்களின் உள்ளத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளை, அதிமுகவின் பொதுச்செயலாளராக பதவி ஏற்றுக் கொண்ட பின் செல்வி ஜெயலலிதா அவர்களின் மறைவை பற்றிய மக்களின் சந்தேகங்களுக்கு நீங்களும் பதில் சொல்ல கடமைப்பட்டிருக்கிறீர்கள்.
கீழ்க்கண்ட சந்தேகங்களை நீங்கள் நிவர்த்தி செய்தீர்கள் என்று சொன்னால், ஜெயலலிதா அவர்கள் வகுத்த நெறிகளில் எள்முனை அளவு கூட மாறாமல் கழகத்தை கட்டிக் காப்பேன் என்று நீங்கள் சொன்னதற்கு மதிப்பு இருக்கும்.
இன்றைக்கு மக்கள் முன் உள்ள மிகப் பெரிய கேள்விகளுக்கு, இந்த பதவிக்கு வரும் முன் விடையளிப்பீர்கள் என்று பொதுமக்கள், உண்மையான கட்சிக்காரர்கள், மற்றும்பெரும்பாலானோர் எதிர்பார்த்தார்கள்.
ஆனால் பதவி ஏற்ற பொழுது முதன் முறையாக நீங்கள் பேசிய போது கூட, அதிமுக செய்தி தொடர்பாளர்கள் சொன்ன உண்மைக்குப் புறம்பான தகவல்களைத்தான் நீங்களும் சொன்னீர்கள்.
ஆம், ஜெயலலிதா அவர்களின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டு, அது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் கடுமையான கருத்தாக வந்த பின்பும், 4 பேரால்தான் இந்த உண்மையை சொல்ல முடியும் என்ற நிலையில் யாரும் சொல்லவில்லை.ஒருவர் நீங்கள், மற்றொருவர் அப்பலோ டாக்டர் பிரதாப் ரெட்டி.
அப்பலோ ரெட்டி அறிவித்த அறிக்கைகளில், பேட்டிகளில் ஒன்றே ஒன்றுதான் உண்மை, அதுதான் ஜெயலலிதா அவர்களது மரணம் பற்றிய அறிக்கை. அந்த அறிக்கை பெயரில்லா கையெழுத்து கொண்ட அறிக்கை. யாருடைய கையெழுத்து என்று தெரியவில்லை. ஏன் கையெழுத்து போட்டு பெயர் போடவில்லை,
அன்றைக்கு நிகழ்ந்த மரணம் அது என்று சொல்வதில், பொறுப்பு ஏற்பதில் கூட எள்முனை அளவு கூட அப்பலோவிடம் உண்மை இல்லையே. அப்படியென்றால் அவரது மரணத்தை நாங்கள் அறிவிக்கவில்லை என்று நீதிமன்றத்தில் தட்டிக்கழிக்கும் வகையில் அப்பலோ அறிக்கை விட்டதா?உண்மையான மருத்துவ அறிக்கையை தொடர்ந்து தமிழக அரசு தெரிவித்திருந்தால், இன்றைக்கு இந்த சந்தேக நிழல் வந்திருக்காது.
மற்றொன்று மத்திய அரசு மௌனம் காக்கிறது. அது அவர்களது அரசியல் காரணங்களுக்காக இருக்கலாம்.எனவேதான், மக்களால் ஜெயலலிதா அவர்களின் மர்ம மரணத்தை இன்று வரை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
முழு உண்மையும் தெரிந்த நீங்கள், இதுவரை வாய் மூடி மௌனியாக இருந்தது ஏனோ? முதல்வர் இறந்த பின்பும் ஒரு விளக்க அறிக்கை உங்களிடம் இருந்து வரவில்லை. ஒரு அஞ்சலி அறிக்கை இல்லை, பதவி ஏற்கும் வரை மெனனம், ஆனால் பதவி ஏற்பிற்கான அனைத்து ஏற்பாடுகளும் உங்களது மேற்பார்வையில் செவ்வனே நடந்தேறி பதவியும் ஏற்றாகி விட்டது. உங்களது முதல் உரையிலும் மக்களது சந்தேகங்களுக்கு சரியான விடையில்லை.
முதல்வராக பதவி ஏற்பதற்குள் உங்களிடம் இருந்து உண்மை நிலையை விளக்கி அறிக்கை வருமா?ஜெயலலிதாவை ஏன் நீங்கள் முன்னாள் முதல்வராக அடக்கம் செய்தீர்கள்? அப்படி என்ன அரசியல் சட்ட சிக்கல் வந்து விட்டது? உங்கள் 33 வருட தோழி, 1.5 கோடி தொண்டர்களின் தலைவி, தமிழக முதல்வராக அடக்கம் செய்யப்பட்டார் என்ற உரிமையை நீங்களும், ஒ.பன்னீர் செல்வமும் ஏன் கொடுக்கவில்லை, நிறைவேற்றவில்லை. ஏன் அந்த உரிமையைப் பறித்தீர்கள், கடமையில் இருந்து விலகினீர்கள். அதற்கான தேவை என்ன? அதற்கான அரசியல் சூழல் என்ன, நெருக்கடி என்ன?செல்வி ஜெயலலிதா உங்களைச் சந்தித்த பின்புதான், அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும், சொத்து குவிப்பு உட்பட அனைத்து வழக்குகளுக்கும் உள்ளானார் என்ற குற்றச்சாட்டில் உண்மையிருக்கிறதா, இல்லையா? உண்மையில்லை என்றால், உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்குப் பின்பு, நாங்கள் ஊழல் குற்றச்சாட்டிற்கு அப்பாற்பட்டவர்கள் என்று நிரூபித்து விட்டு, நான் பதவி ஏற்றுக் கொள்கிறேன் என்று நீங்கள் சொல்லியிருந்தீர்கள் என்றால், நீங்கள் மக்கள் மத்தியில் மிகப் பெரிய உயரத்தில் வைக்கப்பட்டிருப்பீர்கள்.
அதற்குள் என்ன அவசரம்? அனைத்து அதிமுக விதிகளையும் மீறி பொதுச்செயலாளராக ஏன் பொறுப்பேற்க வேண்டும், உடனே முதல்வராக வேண்டும் என்ற அவசரம் ஏன்? அப்படி என்ன அதிமுகவிற்குள் ஒரு நெருக்கடி வந்து விட்டதா, அப்படியா ஜெயலலிதா அம்மா அவர்கள், அதிமுகவை கட்டியமைத்திருக்கிறார்?அம்மா இறந்தபின்பு ஒரு பேனர் வைக்காத, ஒரு அஞ்சலி விளம்பரம் செலுத்தாத பதவியில் இருப்போர்தான், சட்டைப்பையில் அம்மா படத்தை மாற்றி விட்டு, உங்கள் படத்தை மாற்றியவர்கள். கால்களை மாற்றியவர்கள், கலண்டரை மாற்றியவர்கள்தான் உங்களை இன்றைக்கு உயரத்தில் வைத்து பேசுகிறார்கள்.
அம்மாவை நிரந்தர பொதுச்செயலாளார் என்று சும்மா பாசத்திற்காக சொன்னவர்கள், சின்னம்மாவா யார் அது என்று சொல்வதற்கு எவ்வளவு நாள் ஆகும். தீர்ப்பு வந்த பின்பு, இவர்களது வேடத்தை பார்க்க தமிழகம் காத்திருக்கிறது.
அதுவரை பொறுத்திருந்தால், மக்கள் மத்தியில் நல்ல பெயராவது உங்களுக்கு கிடைத்திருக்கும்.அதுவரை நீங்கள் பொறுக்கவில்லை. ஆனால், ஒருவேளை உங்கள் எண்ணங்களுக்கு மாறாக தீர்ப்பு வந்தால், அப்போது நீங்கள் வருந்த வேண்டியது இருக்கும். இவர்களை நம்புவதை விட்டு விட்டு, உண்மையான அதிமுக தொண்டர்களின் மனநிலை அறிந்து, நீங்கள் நடக்க உங்களுக்கு முடியுமா என்பது தெரியவில்லை.
ஆனால் அம்மாவை பதவிக்காவும், பணத்திற்காகவும் புகழ்ந்த அதே கூட்டம், இன்றைக்கு நீங்கள் முதல்வராக வர வேண்டும் என்றும் உங்களை வற்புறுத்துகிறது. நீங்கள் நாளையே முதல்வராகலாம், ஆகி புத்தாண்டு வாழ்த்தைப் பெறலாம். ஆனால் அது நிலையானது இல்லை.
இன்றைக்கு பொதுச்செயலாளராக பொறுப்பேற்று நீங்கள் பேசிய வார்த்தைகள், அனைத்தும் உண்மையென்றால், அதை மக்கள் நம்ப வேண்டும் என்றால், ஒன்றை நீங்கள் செய்ய முடியுமா?ஜெயலலிதா அவர்களது சுயமாக சம்பாதித்த சொத்தை, அவர் ஒருவேளை உயில் எழுதியிராவிட்டால், அதை மக்கள் சொத்தாக அறிவிக்க உங்களால் முடியுமா? அவர் வாழ்ந்த வீட்டை, நினைவிடமாக அறிவிக்க முடியுமா?
33 வருடம் நீங்கள் ஜெயலலிதா அவர்களோடு இருந்து, இருவரும் பங்குதாரர்களாக சம்பாதித்த சொத்துக்கள், அவரது பெயரைப் பயன்படுத்தி நீங்கள் சம்பாதித்த சொத்துக்கள் அனைத்தையும் பொதுமக்களுக்கு, பொது காரியத்திற்கு எம்.ஜி.ஆரைப் போல் அர்ப்பணிக்க உங்களால் முடியுமா?. இல்லையென்றால், அவர் சம்பாதித்த சொத்தை அதிமுக கட்சிக்கு எழுதி வைக்க முடியுமா?இதைச்செய்தீர்கள் என்று சொன்னால், இதய சுத்தியோடு உங்கள் முதல் கன்னிப்பேச்சை மக்கள் ஏற்றுக் கொள்வார்கள்.
இதைச் செய்து விட்டு, உச்சநீதிமன்ற வழக்கில் இருந்து குற்றமற்றவர்கள் நாங்கள் என்று நிரூபித்து விட்டு, முதல்வராக பதவி ஏற்பீர்கள் என்று சொன்னால், நீங்கள் பேசிய முதல் கன்னிப்பேச்சில் உண்மையுள்ளது என்று அர்த்தம்.நீங்கள் செய்வீர்களா?