தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ள நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் ஆய்வு செய்யவுள்ளார்.
தமிழகத்தில், ஏற்கனவே, 17 இடங்களில் தடுப்பூசி ஒத்திகை நடத்தப்பட்டுள்ள நிலையில், மாநிலம் முழுதும், 190 இடங்களில், இன்று ஒத்திகை நடைபெற உள்ளது.
இதன்படி சென்னை, பெரியமேட்டில் உள்ள, மத்திய மருந்து கிடங்கு, சென்னை ராஜிவ் காந்தி, ஓமந்தூரார் அரசு மருத்துவமனைகளில் ஒத்திகை நடைபெறவுள்ளதுடன், சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் ஆய்வு செய்யவுள்ளார்.
இதனைத் தொடர்ந்து தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகளையும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இந்த ஆலோசனையின் போது தமிழகத்திற்கு அதிகளவில்தடுப்பூசி மருந்துகள் கேட்கப்படும் என, தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் சோதனை செய்யப்பட்ட, ‘கோவாக்சின், கோவிஷீல்டு’ தடுப்பூசிகளுக்கு, மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து, நாடு முழுதும், தடுப்பூசிக்கான ஒத்திகை நடந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.