கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தை எவ்வித இணக்கப்பாடுமின்றி முடிவடைந்துள்ளது.
இப்பேச்சுவார்த்தையில் தோட்ட தொழிலாளர்களுக்கு ரூபா 1,000 சம்பள விவகாரம் ஆராயப்பட்டது. எனினும் முதலாளிமார் சம்மேளனம் விட்டுக்கொடுக்காத நிலையில் அடுத்த பேச்சுவார்த்தைக்கு திகதி குறிப்பிடாமலே முடிவுக்கு வந்துள்ளதாக இ.தொ.கா தெரிவித்துள்ளது. அரசாங்கத்தினால் வரவு செலவு திட்டத்தில் அறிவிக்கப்பட்ட தோட்ட தொழிலாளர்களின் 1,000 ரூபா சம்பளத்தை வர்த்தமானி மூலம் அறிவித்து அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் அரசாங்கம் பெற்றுத் தந்தால் கூட்டு ஒப்பந்தத்திலிருந்து தாம் விலகிக்கொள்வதாக இ.தொ.காவின் பொதுச் செயலாளர், தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தை தொழில் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தலைமையில் நடைபெற்றது.
நான்கு சுற்றுப் பேச்சுவார்த்தையில் புதிதாக செய்து கொள்ளப்படவிருக்கும் கூட்டு ஒப்பந்த கருத்துக்களில் தொழிலாளர்களுக்கு பாதகமான ஏதாவது அம்சங்கள் இடம்பெறுமாயின் ஒப்பந்தம் கைச்சாத்திடுவதில் சிக்கல்கள் ஏற்படுமென்றும் இ.தொ.கா வலியுறுத்தி வந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, ஐந்தாவது சுற்று பேச்சுவார்த்தையில் 1,000 ரூபா சம்பள அதிகரிப்பு தொடர்பாக கருத்து பரிமாற்றங்கள் இடம்பெற்ற போதிலும் சம்பள உயர்வில் நியாயத் தன்மை ஏற்படவில்லை
தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,000 ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கப்படுமென்ற உறுதியான நிலைப்பாட்டில் ஜனாதிபதியும், பிரதமரும் எந்நேரமும் இருந்து வந்திருக்கின்றனர்.
இக் கலந்துரையாடலில் இ.தொ.கா சார்பில் அதன் பொதுச் செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான், நிதிச் செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மருதப்பாண்டி ராமேஸ்வரன், பிரதமரின் பெருந் தோட்டங்களுக்கான இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான், பிரதித் தலைவர் அனுஷியா சிவராஜா, இ.தொ.காவின் தேசிய அமைப்பாளர் இராஜதுரை, நிர்வாக உபதலைவர் மாரிமுத்து, உபதலைவர் மதியுகராஜா, இ.தொ.காவின் வெளிவிவகாரங்களுக்குப் பொறுப்பான பரத் அருள்சாமி உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.