கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில் நாட்டில் வேலையற்றோரின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து வருவதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இதற்கு தீர்வாக புதிய தொழில் வாய்ப்புக்களை உருவாக்குவதற்கான வேலைத்திட்டத்தில் அரசாங்கம் ஈடுபட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
கைத்தொழில் மற்றும் முதலீட்டு சபையுடன் ஒன்றிணைந்து அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் தலா ஒரு கைத்தொழிற்சாலையை அமைப்பதற்கான வேலைத்திட்டத்தை அரசாங்கம் ஆரம்பித்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பொலன்னறுவை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கிராமத்திற்கான அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்யும் குழுவின் கூட்டத்திலேயே நாமல் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் சர்வதேச ரீதியில் தற்பொழுது எதிர்நோக்கப்பட்டுள்ள நிலைமைக்கு மத்தியில் இலங்கை பணியாளர்களை நாட்டுக்கு அழைப்பதற்கு அமைவாக புதிய வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான சந்தர்ப்பத்தை பெற்றுக்கொள்வதற்கான வேலைத்திட்டம் ஒன்றையும் அரசாங்கம் ஆரம்பித்துள்ளது என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
தற்பொழுது இளம் தொழில் முயற்சியாளர்கள் ஒரு இலட்சம் பேரை உருவாக்குவதற்காக ஒரு இலட்சம் காணித்துண்டுகளை வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும் இதன் முன்னேற்றங்களை எதிர்வரும் 5 வருட காலப்பகுதியில் கண்டுகொள்ள முடியும் என்றும் கூறியுள்ளார்.