தடையற தாக்க, புத்தகம், என்னமோ ஏதோ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ரகுல் பிரீத் சிங். தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். ரகுல்பிரீத் சிங் அளித்த பேட்டி விவரம் வருமாறு:-
“சினிமாவில் யார், எப்படி மாறுவார் என்றெல்லாம் கணிக்க முடியாது. பல ஆண்டுகள் சினிமாவில் இருக்கும் ஒருவர் நிலைமை ஒரே நாளிலேயே தலைகீழாய் மாறிவிடும். எனக்கு ஆரம்பத்தில் படங்கள் குறைவாகவே வந்தன. கடந்த வருடம் 3 படங்கள் தோல்வி அடைந்தன. இதனால் என்னை அதிர்ஷ்டமில்லாத நடிகை என்று ஒதுக்கினார்கள். நான் நடித்தால் படம் ஓடாது என்றும் முத்திரை குத்தினார்கள்.
இதற்காக நான் துவண்டு விடவில்லை. தொடர்ந்து போராடினேன். அதன் தொடர்ச்சியாக சமீபத்தில் வெளியான படங்கள் வெற்றிகரமாக ஓடின. தமிழ், தெலுங்கு மொழிகளில் படங்கள் குவிகிறது. என்னை அதிர்ஷ்டமில்லாதவள் என்றவர்கள் இப்போது அதிர்ஷ்டக்கார நடிகை என்று கொண்டாடுகிறார்கள். நாளை படங்கள் ஓடாவிட்டால் மீண்டும் அதிர்ஷ்டம் இல்லாத நடிகை என்பார்கள்.
இந்த இடத்துக்கு வருவதற்கு நான் நிறைய உழைத்து இருக்கிறேன். கஷ்டப்பட்டு இருக்கிறேன். வெற்றியை பார்த்து எனக்கு தலைக்கனம் வரவில்லை. தற்போது திரைக்கு வந்து தோல்வி அடைந்த பல படங்களில் என்னைத்தான் கதாநாயகியாக நடிக்க அழைத்தனர். கதை பிடிக்காததால் மறுத்தேன். நல்ல கதைகளை இப்போது என்னால் கணிக்க முடிகிறது.
நான் அதிர்ஷ்டத்தை நம்ப மாட்டேன். உழைப்புதான் முக்கியம். கடின உழைப்புக்கு பலன் உடனே கிடைக்காவிட்டாலும் காத்திருந்தால் நிச்சயம் கிடைக்கும். படங்களின் வெற்றிக்கு நடிகர், இயக்குனர், தொழில் நுட்ப கலைஞர்களின் கூட்டு முயற்சியே காரணம். இயக்குனர் திறமை இல்லாதவராக இருந்தால் படம் ஓடாது.
உணவு, உடற்பயிற்சிகள் மூலம் உடம்பை கட்டுக்கோப்பாக வைத்து இருக்கிறேன். பழம், காய்கறிகள் அதிகம் சாப்பிடுகிறேன். சொந்தமாக உடற்பயிற்சி கூடமும் வைத்து இருக்கிறேன். சமூக சேவைகளிலும் ஈடுபடுகிறேன். அனாதை குழந்தைகளை தத்து எடுத்து வளர்க்கிறேன். அவர்களின் படிப்பு செலவுகளையும் கவனிக்கிறேன். எதிர்காலத்தில் இன்னும் நிறைய பேரை தத்தெடுத்து வளர்ப்பேன்.”
இவ்வாறு அவர் கூறினார்.