பிரெக்சிட் தொடர்பில் பிரித்தானியா மீது வைக்கப்பட்ட புதிய குற்றச்சாட்டு ஒன்றுக்கு பிரித்தானியா மறுப்பு தெரிவித்துள்ளது.
ஜனவரி 1ஆம் திகதி முதல் பிரெக்சிட்டுக்குப் பிந்தைய போக்குவரத்து விதிகள் அமுலுக்கு வந்துள்ள நிலையில், இசைத்துறையைச் சார்ந்தவர்கள் முதலான கலைஞர்கள், விசா இல்லாமல் ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 உறுப்பு நாடுகளில் பயணம் மேற்கொள்வதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
இதனால் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இசைப்பயணம் மேற்கொள்ளும் இசைக்கலைஞர்கள், ஒவ்வொரு ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாட்டுக்கு பயணம் செய்யும்போதும், தனித்தனியே விசா வாங்கவேண்டியுள்ளதால், செலவு அதிகரிக்கும் ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இசைக்கலைஞர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு விசா இல்லாமல் 90 நாட்களுக்கு இசைப்பயணம் மேற்கொள்ளும் திட்டம் ஒன்று பிரெக்சிட் பேச்சுவார்த்தைகளின்போது முன்வைக்கப்பட்டதாகவும், அதை பிரித்தானியா நிராகரித்துவிட்டதாகவும் Independent பத்திரிகையில் செய்திகள் வெளியாகின.
இதனால் பிரபல இசைக்கலைஞர்கள் முதலான பல கலைஞர்கள் கோபமடைந்தனர். ஆனால், அந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ள பிரித்தானிய அரசு செய்தித்தொடர்பாளர் ஒருவர், இது மக்களை தவறாக வழிநடத்தும் வெறும் யூகத்தின் அடிப்படையிலான செய்தி என்று கூறியுள்ளார்.
உண்மையில், பிரித்தானியாதான் இசைக்கலைஞர்கள் உட்பட வர்த்தகம் தொடர்பில் பயணிப்போரை தற்காலிகமாக அனுமதிப்பது தொடர்பான ஒப்பந்தம் வேண்டுமென அழுத்தம் கொடுத்தது.
ஆனால், ஐரோப்பிய ஒன்றியம்தான் அந்த திட்டத்தை நிராகரித்துவிட்டது என்கிறார் அவர்.