திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வீதியை கடக்க முற்பட்ட பெண்ணை டிப்பர் வாகனம் மோதியதில் அவர் படுகாயமடைந்த நிலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தம்பலகாமம் 96 ஆம் கட்டைப்பகுதியில் இவ்விபத்துச் சம்பவம் இன்று(11) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
முள்ளிப்பொத்தானை 94 கட்டைப்பகுதியைச் சேர்ந்த 65 வயது பெண்ணொருவரே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குருணாகல் பகுதியிலிருந்து திருகோணமலைக்கு நிலக்கரி வகைகளை ஏற்றுவதற்காக சென்ற டிப்பர் வாகனமே இவ்வாறு வீதியை கடக்க முற்பட்ட பெண்ணுடன் மோதியுள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.
டிப்பர் வாகனத்தின் சாரதியை கைது செய்யப்பட்டதுடன் டிப்பர் வாகனமும் தம்பலகாமம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.
விபத்துக்குள்ளான பெண் கந்தளாய் தள வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைபெற்று வருவதோடு மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.