இத்தாலியில் நடைபெறும் செர்ரி-ஏ கால்பந்து லீக் தொடரில், ஜூவெண்டஸ் அணி சிறப்பான வெறற்றியை பதிவுசெய்துள்ளது.
ஜூவெண்டஸ் விளையாட்டரங்களில் இன்று உள்ளூர் நேரப்படி நடைபெற்ற போட்டியில், ஜூவெண்டஸ் அணியும் சசுவோலோ அணியும் மோதின.
பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், இரு அணி வீரர்களுமே ஆக்ரோஷமாக களத்தில் முட்டி மோதின.
எனினும், போட்டியின் ஆரம்ப நிமிடங்களில் இரு அணிகளும் தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்தியதால் போட்டியின் முற்பாதியில் இரு அணிகளாலும் கோல் அடிக்க முடியவில்லை.
தொடர்ந்து இரண்டாவது பாதியில் ஜூவெண்டஸ் அணி வீரர்கள் சிறப்பாக விளையாடினர். போட்டியின் 50ஆவது நிமிடத்தில் ஜூவெண்டஸ் அணியின் வீரரான டேனிலோ அணிக்காக முதலாவது கோலை பதிவுசெய்தார்.
இதனையடுத்து பதிலடி கொடுக்கும் முனைப்பில் விளையாடிய சசுவோலோ அணி, போட்டியின் 58ஆவது நிமிடத்தில் டிப்ரெலின் துணையுடன் அணிக்காக ஒரு கோலை அடித்து கோல் கணக்கை 1-1 என சமநிலைப்படுத்தியது.
தொடர்ந்து ஜூவெண்டஸ் அணி வீரர்கள் துடிப்புடன் விளையாடினர். போட்டியின் 82ஆவது நிமிடத்தில் ஜூவெண்டஸ் அணி வீரரான ஆரோன் ரெம்ஸே அணிக்காக இரண்டாவது கோலை பெற்றுக்கொடுத்தார்.
இதனைதொடர்ந்து இரு அணிகளும் கோல் போடுவதற்கு களத்தில் கடுமையாக போராடின. எனினும் முன்னிலை கோலை புகுத்துவதற்கான வாய்ப்பு ஜூவெண்டஸ் அணிக்கே கிடைத்தது.
அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ்டீயானோ ரொனால்டோ, 92ஆவது நிமிடத்தில் அணிக்கு மூன்றாவது கோலை பெற்றுக்கொடுத்தார்.
மேற்கொண்டு இரு அணிகளாலும் கோல் அடிக்க முயற்சித்தும் அது பலனளிக்கவில்லை. இதனால் ஜூவெண்டஸ் அணி 3-1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றது.
இதுவரை நடைபெற்று முடிந்த முடிவுகளின் அடிப்படையில், ஜூவெண்டஸ் அணி இதுவரை 16 போட்டிகளில் விளையாடி 33 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது.
சசுவோலோ அணி, 17 போட்டிகளில் விளையாடி 29 புள்ளிகளுடன் ஏழாவது இடத்தில் உள்ளது.