ட்விட்டர் நிறுவனம் அமெரிக்க கேபிடல் கலவரத்துக்கு தொடர்புடைய 70,000 கணக்குகளை இடை நீக்கம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடன் தேர்தலில் வெற்றி பெற்றதை அமெரிக்க காங்கிரஸ் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த ஜனவரி 6-ஆம் திகதி ஆயிரக்கணக்கான டிரம்ப் ஆதரவாளர்கள் நாடாளுமன்ற வளாகத்தை முற்றுகையிட்டு பெரும் கலவரத்தில் ஈடுபட்டனர்.
நாடாளுமனறத்தின் உள்ளே வரை சென்று நடத்தப்பட்ட இந்த வரலாற்றுமிக்க கலவரத்தில் ஒரு கேபிடல் காவல் அதிகாரி உட்பட 5 பேர் உயிரிழந்தனர். மேலும் கேபிடல் அலுவலகங்கள் முழுவதும் சேதப்படுத்தப்பட்டது.
ஜோ பைடன் வரும் ஜனவரி 20-ஆம் தேதி பதவி பிரமாணம் செய்யவுள்ள நிலையில், அதே நாளில் அல்லது அதற்குறப்பட்ட நாட்களில் மீண்டும் டிரம்ப் ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபடலாம் என்று எஃப்.பி.ஐ எச்சரித்துள்ளது.
இந்நிலையில், QAnon உள்ளடக்கத்தைப் பகிர்வதற்கு முதன்மையாக அர்ப்பணிக்கப்பட்ட 70,000-க்கும் மேற்பட்ட கணக்குகளை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக ட்விட்டர் நிறுவனம் திங்கட்கிழமை மாலை தெரிவித்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை, QAnon உள்ளடக்கத்தைப் பகிர்ந்த கணக்குகளை முற்றிலுமாக நீக்குவதாக கூறியதையடுத்து, சில காரணங்களுக்காக 70,000-க்கும் மேற்பட்ட கணக்குகளை தற்காலிகமாக முடங்கியுள்ளது.
கடந்த வாரம் அதிபர் டொனால்டு டிரம்பின் ட்விட்டர் கணக்கை நிரந்தரமாக நீக்கியதையடுத்து, ட்விட்டர் நிறுவனத்தின் பங்குகள் கடுமையாக வீழ்ச்சியடைந்து, சந்தை மதிப்பில் 5 பில்லியன் டொலர்களை இழந்தது.
இதற்கிடையில், அமேசான் நிறுவனமும் QAnon தொடர்பான அனைத்து பொருட்களையும், தயாரிப்புகளையும் விற்பனைக்கு தடை செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.