பொங்கல் பண்டிகை வந்துவிட்டது. இத்தினத்தில் உலக வாழ் தமிழர்கள் அனைவரும் வெகுசிறப்பாக தங்களது வீட்டில் பொங்கல் வைத்து கொண்டாடப்படுவது வழக்கம்.
சர்க்கரை பொங்கல், பால் பொங்கல், வெண்பொங்கல் போன்றவை வித்தியாசமாக செய்யப்படும்.
அதில் இன்று பால் பொங்கலை எப்படி எளியமுறையில் செய்யலாம் என்பதை இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
- பச்சரிசி – ஒரு கப்
- நெய் – 2 டீஸ்பூன்
- வெல்லம்/சர்க்கரை – 3/4 கப்
- பால் – 4 கப்
- முந்திரி – 20
- உலர் திராட்சை – 20
- ஏலக்காய் பொடி – ஒரு டீஸ்பூன்
- நெய் – 3-4 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் பச்சரிசியை நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.
பின் ஒரு குக்கரில் கழுவிய பச்சரிசியைப் போட்டு, அதில் ஒரு டீஸ்பூன் நெய் மற்றும் பாலை ஊற்றி கிளறி, குக்கரை அடுப்பில் வைத்து, குக்கரை மூடி, குறைவான தீயில் 3-4 விசில் விட்டு இறக்கவும்.
விசில் போனதும், குக்கரைத் திறந்து கரண்டியால் நன்கு கிளறி, பின் அதில் வெல்லம்/சர்க்கரையைப் போட்டு கிளறி, மீண்டும் அடுப்பில் வைத்து 2 நிமிடம் கிளறி இறக்க வேண்டும்.
அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ஒரு டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி, முந்திரியைப் போட்டு பொன்னிறமாக வறுத்து, பின் உலர் திராட்சையைப் போட்டு, திராட்சை பலூன் போன்று வீங்கும் வரை வதக்கி இறக்கி, குக்கரில் உள்ள பொங்கலில் ஊற்ற வேண்டும்.
இறுதியில் அதில் 3-4 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி, ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு கிளறி இறக்கினால், சுவையான பால் பொங்கல் தயார்.
குறிப்பு
பால் பொங்கல் நன்கு குளிர்ந்த பின் மிகவும் கெட்டியாக இருப்பது போன்று இருந்தால், அதில் சிறிது சுடுநீர் அல்லது சூடான பாலை ஊற்றி கிளறிக் கொள்ளலாம்.
பால் பொங்கலுக்கு சர்க்கரை அல்லது வெல்லம் என எது வேண்டுமானாலும் சாப்பிடலாம்.