அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் அனுருத்த பாதெனியவின் வீட்டில் நடைபெற்ற விருந்தில் கலந்து கொண்டிருந்த வைத்தியர் ஒருவர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அனுருத்த பாதெனியவிற்கு நெருக்கமான 3 குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் என சுமார் 20 பேர் கலந்து கொண்ட விருந்து கட்த 8ஆம் திகதி நடைபெற்றது.
மினுவாங்கொட, உகல்கொடவில் வசிக்கும் வைத்தியரே தொற்றிற்குள்ளானார். மினுவாங்கொட பிராந்திய சுகாதார மருத்துவ அதிகாரி வைத்தியர் அனுஜ பெர்னாண்டோ, விருந்தில் பங்கேற்ற அனைவரையும் தனிமைப்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளார்.
தொற்றிற்குள்ளான வைத்தியர் அவிசாவளை ஆதார வைத்தியசாலையில் பணிபுரிகிறார். 10ஆம் திகதி ஒரு திருமண நிகழ்விலும் கலந்து கொண்டார்.
அவருக்கு தொற்று 13ஆம் திகதி உறுதியானது. தற்போது அங்கொட தேசிய தொற்று நோய்கள் நிறுவனத்தில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதற்கிடையில், அப்பகுதிக்கு பொறுப்பான மூன்று பொது சுகாதார ஆய்வாளர்கள் நேற்று (13) இரவு 7.45 மணியளவில் வைத்தியர் அனுருத்த பாதெனியவின் வீட்டிற்கு வந்து அவரை தனிமைப்படுத்த முயன்றனர். எனினும், அது வெற்றியடையவில்லை. காரணம், அனுருத்த பாதெனிய வீட்டு வாசல் கதவை திறக்கவில்லை, வீட்டிலுள்ள மின்சாரத்தை அணைத்துவிட்டார். இதனால், பொது சுகாதார ஆய்வாளர்கள் களனி பிராந்திய சுகாதார அலுவலருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவர் இன்று (14) காலை சென்று தனிமைப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.