இந்தியாவில் உள்ள சிதம்பரம் திருவாதிரை விழாவுக்கு இலங்கையிலிருந்து கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு கப்பல் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த தகவலை தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
சிதம்பரத்தில் நடைபெறவுள்ள திருவாதிரை திருவிழாவில் கலந்து கொள்ள இலங்கையிலுள்ள இந்து பக்தர்கள் சிறப்பு கப்பல் மூலம் குறைந்த செலவில் செல்ல அனுமதிக்க வேண்டும் என வடமாகாண ஆளுநர் ரெஜினால் குரேவிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்தக் கோரிக்கையினை ஏற்று இலங்கை அரசு வெளியுறவுத்துறை மூலம் யாழ் காங்கேசன்துறையிலிருந்து காரைக்காலுக்கு சிறப்பு கப்பல் பயணத்திற்கு ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டன.
இது குறித்து இலங்கையிலுள்ள இந்திய துணைத் தூதரக அதிகாரி கூறியதாவது,
”இந்திய அரசு சிறப்பு கப்பல் சேவைக்கான கோரிக்கையை ஏற்றுக் கொண்டது.
ஆனால் குறுகிய காலத்தில் காரைக்கால் மற்றும் காங்கேசன்துறையில் கப்பல் துறைகள் அமைப்பதில் ஏற்பட்ட தாமதத்தினால் கப்பல் சேவை ரத்துச் செய்யப்பட்டது.
எதிர்வரும் ஆண்டுகளில் சிறப்பு கப்பல் சேவை இயக்கப்படலாம்” என்று தெரிவித்துள்ளதாக அந்த செய்தி உள்ளது.
சிதம்பரம் நடராஜர் சிவாலயங்களில் ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் திருவாதிரைத் திருவிழா நடைபெறும்.
இந்த ஆண்டு திருவிழாவின் கொடியேற்றம் இன்று ஆரம்பிக்கப்பட்டு ஜனவரி 10 அன்று தேர்த் திருவிழாவும், ஜனவரி 11 ஆருத்ரா தரிசனமும், ஜனவரி 12 பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு வீதி உலாவும் நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.