ரசிகர்களின் வேண்டுகோளை ஏற்று நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிரஞ்சீவி நடித்திருக்கும் படம் ‘கைதி எண் 150’. இதை விநாயக் இயக்கி இருக்கிறார். இது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த ‘கத்தி’ படத்தின் தெலுங்கு ரீமேக்.
சிரஞ்சீவி ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருக்கும் இதில், ராய்லட்சுமி ஒரு பாட்டுக்கு ஆடி இருக்கிறார். வருகிற 13-ந் தேதி சங்கராந்தியையொட்டி இந்த படம் ‘ரிலீஸ்’ ஆகிறது.
இதில் காஜல் அகர்வால் நடித்தது குறித்து கூறிய இயக்குனர் விநாயக், “இந்த படத்தில் சிரஞ்சீவி ஜோடியாக நடிக்க அனுஷ்கா தேர்வு செய்யப்பட்டார். அவர் ‘பாகுபலி-2’ உள்ளிட்ட படங்களுக்கு ஏற்கனவே கால்ஷீட் கொடுத்து விட்டதால் இதில் நடிக்க முடியவில்லை.
இதன் பிறகு காஜல் அகர்வாலை அணுகினோம். அவரும் வேறு படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டிருந்தார். எனவே முதலில் தயங்கினார்.
இந்த படத்தின் தயாரிப்பாளர் சிரஞ்சீவியின் மகன் ராம்சரண். அவர் காஜலின் நண்பர். அவரது நட்பை மதித்து காஜல் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். சிரஞ்சீவியுடன் நடிப்பதற்காக காஜல் ஏற்கனவே ஒப்புக் கொண்ட ஒரு படத்தில் இருந்து விலகி ‘கைதி எண் 150’ படத்தில் நடித்தார்” என்றார்.
இந்த படத்துக்கு ‘யு ஏ’ சான்றிதழ் கிடைத்துள்ளது. சிரஞ்சீவிக்கு வயது 61. காஜலின் அப்பா வயது. என்றாலும் சிரஞ்சீவியின் ஸ்டைலும், அழகும் அப்படியே இருக்கிறது. ஜோடி பொருத்தம் சூப்பர் என்று தெலுங்கு ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.