தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 10 மாத காலமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள் இன்று (செவ்வாய்க்கிழமை) திறக்கப்படுகின்றன.
மேலும், சுகாதார நடைமுறைகள் பின்பற்றி பாடசாலைகளை திறப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தமிழக அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்றைய தினம், 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பாடசாலைகளே திறக்கப்படுகின்றன. மாணவர்களும் ஆர்வமாக பாடசாலைக்கு வருவதில் கவனம் செலுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அத்துடன் பாடசாலைகள் திறக்கப்பட்டாலும் முதல் 2 நாட்கள் வகுப்புகள் எதுவும் நடைபெறாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 2 நாட்களும் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் பொதுத்தேர்வை அச்சமின்றி எழுதுவது தொடர்பான ஆலோசனைகளும் அறிவுரைகளும் மாணவர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது. இதற்காக ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சிகளும் அளிக்கப்பட்டுள்ளன.
மேலும் 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு பாடத்திட்டத்தை குறைப்பது குறித்தும் அரசு பரிசீலனை மேற்கொண்டு, 30 முதல் 40 சதவீதம் அளவுக்கு பாடங்களை குறைத்துள்ளது.
இதேவேளை தமிழகம் முழுவதும் பாடசாலைகளில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் பாதுகாப்பு அம்சங்களை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆய்வு செய்யுமாறு அரசினால் உத்தரவிடப்பட்டது.
அதன்படி மாநிலம் முழுவதிலும் உள்ள பாடசாலைகளில் கல்வி அதிகாரிகள் ஆய்வுகளை மேற்கொண்டனர். சென்னை செனாய்நகரில் உள்ள திரு.வி.க. அரசு மேல்நிலைப்பாடசாலையை, கல்வி பணிப்பாளர் ச.கண்ணப்பன் ஆய்வு மேற்கொண்டார். இதேபோல சென்னை மாநகரில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த ஆய்வின்போது பாடசாலை வளாகம் தூய்மையாக உள்ளதா? மாணவர்கள் கல்வி கற்கும் சூழல் இருக்கிறதா? வகுப்பறைகள், கழிவறைகளில் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறதா? கணனி உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் முறையாக பராமரிக்கப்பட்டுள்ளதா? என பல்வேறு விடயங்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வில் ஈடுபட்டனர்.