ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா செனகா (Oxford Astra Zeneca) கொரோனா தடுப்பூசியை இலங்கையில் பயன்படுத்த தேசிய ஔடதங்கள் கூட்டுத்தாபனம் அனுமதியளித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்தியாவினால் தயாரிக்கப்படும் கொவிசீல்ட் (COVISHIELD) தடுப்பூசியை அவசரகால தேவைக்காக பயன்படுத்த அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசு தமக்கு அறிவித்துள்ளதாக கொழும்பிலுள்ள இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.
இந்த பின்னணியில் இன்று, கொரோனா தடுப்பூசிகளை ஏற்றுவது தொடர்பான ஒத்திகை இன்று (23) இடம்பெறவுள்ளது.
பிலியந்தல சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், பிலியந்தல மாவட்ட வைத்தியசாலை, ராகம போதனா வைத்தியசாலையில் இந்த சோதனை மேற்கொள்ளப்படும் என சுகாதார சேவைகள் துணை பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி திட்டத்தை தொடங்கும் போது ஏற்படக்கூடிய நடைமுறை சிக்கல்களை அடையாளம் காணவும், ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நபர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு செலவாகும் நேரத்தை தீர்மானிக்கவும் இந்த சோதனை மேற்கொள்ளப்படும்.
தடுப்பூசி கிடைத்தவுடன் அதை வழங்க சுகாதார அமைச்சகம் தயாராக உள்ளது என்றும் அவர் கூறினார்.
தடுப்பூசியை திறம்பட நிர்வகிக்கவும், சேமிக்கவும் விநியோகிக்கவும் வழிமுறைகளை புதுப்பித்து ஆராய்ச்சி செய்யும் பணியில் அமைச்சு உள்ளது என்றார்.
இதேவேளை, தற்போது 26 கோவிட் -19 நோயாளிகள் தீவிர சிகிச்சை பிரிவுகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாடு முழுவதும் 79 சிகிச்சை மையங்கள செயற்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தார்.
நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க 13,012 படுக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 9,399 படுக்கைகளில் நோயாளிகள் உள்ளதாகவும், தேவைப்பட்டால் மேலும் 120 ஐசியு படுக்கைகள் தயார்படுத்த முடியுமென்றும் தெரிவித்தார்.